உதயநிதி வாக்குறுதி: 2026க்கு 'ரிஸ்க்'
தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் தி.மு.க., தலைவர்கள், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேர்தல் முடிந்ததும் விடுபட்ட அனைவருக்கும், உரிமைத் தொகை வழங்கப்படும் என, அமைச்சர் உதயநிதி வாக்குறுதி அளித்து வருகிறார். விடுபட்ட அனைவருக்கும் என்றால், விண்ணப்பித்து விடுபட்டவர்களுக்கா அல்லது விண்ணப்பிக்காதவர்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்குமா என, மக்களிடம் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'சமூக நீதி' என்ற தலைப்பின் கீழ், 'தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்' என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.
இது தேர்தலில் முக்கிய பிரசாரமாக அமைந்தது; பெண்களைக் கவர்ந்தது. தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அனைத்து பெண்களும், தங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்க, அரசு தரப்பில் தகுதியான பெண்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டது. இது பெண்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டுகள்
ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்; சொந்த வீடு இருக்கக் கூடாது; நான்கு சக்கர வாகனம் இருக்கக் கூடாது; விளைநிலம் இருக்கக் கூடாது; அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது; ஓய்வூதியம் பெறுபவராகவோ, ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி செலுத்துபவராக ேவா இருக்கக் கூடாது; 'கிரெடிட் கார்டு' பயன்படுத்துவோராக இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளால், பெண்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தேர்தல் அறிக்கையில், அனைத்து பெண்களுக்கும் எனக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின், தகுதியான பெண்களுக்கு மட்டும் என்பது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பினர்; அரசு தரப்பில் பதில் இல்லை.
அரசு விதித்த விதிமுறைகளின்படி, உரிமைத் தொகை கிடைக்காது எனக் கருதியவர்கள் விண்ணப்பிக்காத நிலையில், உரிமைத் தொகை பெற, 1.63 கோடி மகளிர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1 கோடியே 6 லட்சத்து 58,375 மகளிர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின், தகுதி இருந்தும் தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள், முகாம்களில் பெறப்பட்டு பதிவாகாமல் போன விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டன. அவற்றில் தகுதியுடைய 7.35 லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு, நவம்பர் மாதம் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து, 1 கோடியே 13 லட்சத்து 84,300 பேருக்கு, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி, அவர்களின் வங்கிக் கணக்கில், 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இத்தேர்வு முறைப்படி நடக்கவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு காரணமாக, தகுதி இல்லாதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. சொந்த வீடு வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாடகைக்கு குடியிருப்போருக்கு வழங்கப்படவில்லை என, சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விபரம் இல்லை
அதைத் தொடர்ந்து, 'விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படும்' என அரசு அறிவித்தது. அதன்படி 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது அரசு தகவலின்படி, 1.15 கோடி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இவர்களின் ஓட்டுகள் தங்களுக்கு வந்து விடும் என்பது, தி.மு.க.,வின் கணக்கு.
ஆனால், மாதம் 1,000 ரூபாய் பெறுவோர் அமைதியாக இருக்க, அத்தொகை கிடைக்காத பெண்களோ கோபத்தில் உள்ளனர். ஓட்டு கேட்டு வரும் தி.மு.க.,வினரிடம் காட்டமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் என அனைவரிடமும் கேள்வி கேட்க, எதிர்க்கட்சிகளும் இதை பெரிதாக்கின. அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி தன் பிரசாரத்தின்போது, 'விடுபட்ட அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார். அடுத்தடுத்த பிரசாரங்களில், அனைத்து பெண்களுக்கும் எனக் கூறுவதை தவிர்த்து விட்டார்.
குளறுபடி
தென்காசியில் பிரசாரம் செய்தபோது, 'எனக்கு வருது; பக்கத்து வீட்டு பெண்ணுக்கு வரவில்லை. எதிர்த்த வீட்டு பெண்ணுக்கு வருது; எனக்கு வரவில்லை என்ற குறைபாடு உள்ளது. அது சரி செய்யப்படும். அதற்கு பொறுப்பு அமைச்சர் நான்தான். இதை முதல்வரிடம் கொண்டு போய் சரிபார்ப்பு பணி முடித்து, 100 சதவீதம் தகுதியுள்ள பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வரும்' என, உறுதி அளித்தார்.
அமைச்சரின் வாக்குறுதி மீண்டும் குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ள பெண்களுக்கா அல்லது விண்ணப்பிக்காமல் விட்டவர்களுக்கும் வழங்கப்படுமா எனற, புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் வட்டாரங்களில் கூறியதாவது:
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ஒரே நாளில் ரத்து செய்யப்படும் என்றார் உதயநிதி. அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்தார். இப்படி சொல்லப்பட்ட எதையும் மூன்றாண்டுகளில் செய்யவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் இப்படி வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், காசிமேட்டில் இருந்து கோயம்பேட்டுக்கு ராக்கெட் விடப்படும்; அதில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால் 2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு ரிஸ்க் ஆகும் என அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
இவ்வாறு அவ்வட்டாரங்களில் கூறினர்.
வாசகர் கருத்து