குப்பை வண்டிகளில் ஒலிக்குது தேர்தல் பிரசார குரல்
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகம் முழுதும் நாளை நடக்கிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கல்லுாரி மாணவர்கள் பேரணி, பைக் பேரணி, மணல் சிற்பம் வாயிலாக விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை, தேர்தல் அறிவிப்பு துவங்கிய நாளில் இருந்து, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், நகரில் குப்பை அள்ள பயன்படுத்தப்படும், பேட்டரியால் இயக்கக்கூடிய வாகனங்களில், ஒலிபெருக்கி வாயிலாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது.
வழக்கமாக காலை நேரத்தில், 'நம் ஊரு, காலை - மாலை' போன்ற பாடல்கள், குப்பை விழிப்புணர்வு சம்பந்தமாக, அந்த வாகனத்தில் ஒலிக்கும்.
நேற்று, அதற்கு மாறாக, 'ஓட்டளிப்பது உங்கள் கடமை. வாக்காளர்கள் அனைவரும், ஏப்ரல் 19ம் நாளில் மறக்காமல் ஓட்டளிக்க வேண்டும்' என்ற பிரசார குரல் ஒலித்தது. தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்த இப்பிரசார விழிப்புணர்வு, பலரை ஆச்சரியப்படுத்தியது.
வாசகர் கருத்து