செல்வாக்கை நிரூபிக்க போட்டா போட்டி: கட்சியினரை எச்சரித்த உதயநிதி
பிரசாரத்தில் செல்வாக்கை நிரூபிக்க, கூச்சலிட்ட தி.மு.க., நிர்வாகிகளின் ஆதரவாளர்களை பார்த்து, 'ஒற்றுமை அவசியம்' என, உதயநிதி எச்சரித்தார்.
வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி, திருவொற்றியூர், தேரடி சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, கட்சி நிர்வாகிகளின் பெயரை ஒருவர் பின் ஒருவராக உச்சரித்தார். முதலில், மாவட்ட செயலர், மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் பெயரை உச்சரிக்கும்போது, கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, பகுதி செயலர்கள் தனியரசு, அருள்தாசன் பெயருக்கும் நல்ல ஆர்ப்பரிப்பு இருந்தது. திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் பெயரை உச்சரிக்கும் போது, உதயநிதி பேச முடியாத அளவிற்கு ஆரவாரம் எழுந்தது.
இதை உன்னிப்பாக கவனித்த உதயநிதி, 'ஒற்றுமை மிக மிக அவசியம். இன்னும் தேர்தலுக்கு, 11 நாட்களே இருக்கும் நிலையில், ஒற்றுமையுடன் பணியாற்றி, வேட்பாளரை வெற்றிப் பெற செய்யவேண்டும்' என, எச்சரிக்கும் வகையில் ஒற்றை விரலை உயர்த்தி பேசினார்.
இதனால், திருவொற்றியூர் தி.மு.க.,வில் இருக்கும் உட்கட்சி பூசல், கட்சி தலைமைக்கு தெரிய வந்திருக்கும். அதனால் தான், ஒற்றுமை அவசியம் என, உதயநிதி கூறுவதாக, கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
தி.மு.க.,வினர் கூறியதாவது:
தி.மு.க., ஆளும்கட்சியான பின், தமிழகம் முழுதும் கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகமாகி இருக்கிறது. வட்டச் செயலரில் துவங்கி மா.செ.,க்கள் வரை ஆளாளுக்கு மோதிக் கொண்டிருக்கின்றனர். கோஷ்டி கோஷ்டியாக செயல்படுவதால் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் அதிகாரம் செலுத்துவது துவங்கி, திட்டங்கள் வாயிலாக பணம் சம்பாதிப்பது வரை, கோஷ்டியினர் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் பொறுப்பாளர்கள், இதை வெளிக்காட்டுகின்றனர். இது அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வரை அதிகமாக இருந்தது. தற்போது, இளைஞர் அணி செயலரும் அமைச்சருமான உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் நடக்கிறது. சில நேரங்களில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் நடக்கிறது.
இதெல்லாவற்றையும் நேரடியாகவே பார்த்த பின் தான், திருவொற்றியூர் கூட்டத்தில் எச்சரிக்கும் தொனியில் அமைச்சர் உதயநிதி பேசிவிட்டார். தேர்தல் முடிந்த பின், கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், கட்சித் தலைவர்கள் மத்தியில் கருத்து வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வடசென்னை வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து, நான்கு நாட்களுக்கு முன், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில், உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, 2019ல் ஸ்டாலினுக்கு திரண்ட அலைபோல் தொண்டர்கள் கூட்டம் இல்லை.இதற்கு காரணம் என்ன என்பது குறித்து உதயநிதி விசாரித்துள்ளார். அப்போது தான், வட சென்னை தி.மு.க., கோஷ்டி பூசல் குறித்த முழு விபரமும் தெரிய வந்திருக்கிறது. கூடவே, வடசென்னை தொகுதியில் ராயபுரம், திருவொற்றியூர் தி.மு.க.,வுக்கு பலவீனமாக உள்ளது என்ற தகவலும் தெரிய வர, மீண்டும் அத்தொகுதியில் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார் உதயநிதி. இதையடுத்து, மீண்டும் வட சென்னை தொகுதிக்கு பிரசாரத்துக்காக சென்றுள்ளார் உதயநிதி. அப்போது உதயநிதி கலந்து கொண்ட கூட்டத்திற்கு 3,000த்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இதனால், திருவொற்றியூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
வாசகர் கருத்து