உதயநிதியின் பிரசாரத்தை சாதகமாக்கும் பா.ஜ.,
மதுராந்தகத்தில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்த போது, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் 'ஒயின்ஷாப் மூடப்படும் என கூறினீர்கள்; மூடினீர்களா' என கேட்டனர். அதற்கு உதயநிதி, 'டாஸ்மாக் மூட வேண்டுமா? 2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை தேர்ந்தெடுத்தால், எல்லா ஒயின்ஷாப்பையும் மூடி விடுகிறேன் என்று சொன்னார். ஓட்டு போட்டீங்களா.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தது என்றால் எல்லா ஒயின்ஷாப்பையும் மூடி விடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஓட்டு போட்டீங்களா. யாருக்கு ஓட்டு போட்டீங்க. அ.தி.மு.க.,விற்கு தானே ஓட்டு போட்டீங்க' என கூறினார்.
இந்த பேச்சை தற்போது தங்களுக்கு சாதகமாக மாற்றியிருக்கின்றனர் பா.ஜ.,வினர். உதயநிதி பேசியதைக் கூறி, பார்த்தீர்களா, ஓட்டு போடாததால் டாஸ்மாக்கை மூடவில்லை என காரணம் கூறுகிறார். தற்போது ஆட்சியில் இருப்பதை அவர் மறந்து விட்டார். ஆனால் பிரதமர் மோடியோ தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்காவிட்டாலும் எவ்வளவு திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார் பாருங்கள்' எனக் கூறி பா.ஜ., திட்டங்களை விவரிக்கின்றனர்.
'ஓட்டு போடாமலே இவ்வளவு செய்துள்ள பா.ஜ.,வும் பிரதமர் மோடியும் நீங்கள் ஓட்டு போட்டால் எவ்வளவு செய்வர், எவ்வளவு திட்டங்களை கொடுப்பர். யோசித்து பாருங்க மக்களே' என பா.ஜ.,வினர் ஓட்டுக் கேட்கின்றனர். இது மக்களை சிந்திக்க வைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ., வட்டாரத்தினர் கூறுகையில், 'ஓட்டு போட்டாதான் செய்வோம் என, அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது எங்களுக்கு தான் சாதகம் நாங்கள் ஓட்டு போடாமலேயே தமிழகத்திற்கு எவ்வளவு செய்துள்ளோம் என, பட்டியிலிட்டு கூற வசதியாக இருக்கிறது' என்றனர்.
வாசகர் கருத்து