உதயநிதியின் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதா: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
"முதல்வர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்ததாவது:
பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார், பிரதமர் மோடி. குஜராத் மாடல், சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கியாரண்டி கார்டுடன் 2024-க்கு மோடி வந்திருக்கிறார்.
அவர் இதோ இந்த கியாரண்டிகளையும் தருவாரா?
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்; எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்; தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு; ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது; மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து;
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400; வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்; தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்;
செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்; அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்; மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்; வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்;
கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்; வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.,வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்; கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்; சீனா ஆக்ரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்;
தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்; அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்; வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு; ன்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி மத்திய அரசின் நிதி விடுவிப்பு;
தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்
என இதற்கெல்லாம் மோடி கியாரண்டி தருவாரா? இல்லையென்றால் உங்கள் கியாரண்டி என்பது ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
மோடி தான் 3வது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க இருக்கிறார் என்ற உண்மையை, தன்னை அறியாமல் வெளிப்படுத்தியிருக்கும் ஸ்டாலினுக்கு நன்றி.
வெறும் 21 இடங்களில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச் சந்தைக் கூடக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை, தமிழக முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்?
மகனும் மருமகனும் சேர்ந்து ரூ.30,000 கோடி ஊழல், மணல் கொள்ளை, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கனிமவளங்கள் கொள்ளை, கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை,
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, சிறைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் என இவ்வளவு குழப்பங்கள் உள்ளன.
இதற்கு மத்தியில், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், தங்கள் குடும்பத்தின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலின்போது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் மத்திய அரசிடம் நிறைவேற்றக் கோரியிருப்பது தான், இந்த நீளமான துண்டுச் சீட்டில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் அதனை அப்படியே வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தி.மு.க.,வும் காங்கிரசும் கச்சத்தீவைத் தாரைவார்த்ததன் விளைவு, நமது மீனவர்கள், இத்தனை ஆண்டுகளாகப் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து மாநிலங்களும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்க, போலி சமூக நீதியை நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க.,
சொந்தத் தொகுதியை விட்டுவிட்டுத் தனித் தொகுதி என்பதற்காக 2ஜி ராஜாவை நீலகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறது, தி.மு.க., மலைக்கிராமங்களுக்குச் சாலை வசதியைக் கூட அமைத்துக் கொடுக்காமல், வெட்கமே இல்லாமல் சமூக நீதி பற்றிப் பேசுவதெல்லாம் தேவையா?
நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களும் மருத்துவக் கல்வி பெற ஒரு வரப் பிரசாதம். உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சம்பாதிக்க, நாங்கள் ஏன் நீட் தேர்வை விலக்க வேண்டும்?
தமிழக மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துக் கேட்பு நடத்தத் தயாரா. கையெழுத்து இயக்கம் என்று உங்கள் பட்டத்து இளவரசர் ஆடிய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதா?
கடந்த 2021 தேர்தலின்போது, 511 வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க, அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கூற தைரியம் இருக்கிறதா?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் எந்தச் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். முதல்வர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.
யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கூறுவது உங்கள் வழக்கமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கு அது அழகில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து