மோடிக்கு பயந்து அரசியல் செய்கிறார் பழனிசாமி: உதயநிதி பேச்சு
"எடப்பாடி தொகுதியில் இருந்து முதல்வர் ஆக நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அனைத்து உரிமைகளையும் பா.ஜ., அரசிடம் அடகு வைத்தது தான் பழனிசாமியின் ஒரே சாதனை" என, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் தி.மு.க., வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக மக்களை மதிக்காமல் தொடர்ந்து வேட்டு வைத்து வரும் மோடிக்கு இந்த முறை நீங்கள் வேட்டு வைக்க வேண்டும். கடந்த முறை எஸ்.ஆர்.பார்த்திபனை ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்தமுறை வாக்கு வித்தியாசம் 3 லட்சம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
எந்தக் கொம்பன் நின்றாலும் அவருக்கு டெபாசிட் பறிபோக வேண்டும். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதத்துக்கு 2 நாள் சேலத்துக்கு வருவேன். சேலத்துக்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அதை முதல்வரிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என உறுதி கொடுக்கிறேன்.
மோடி சொல்வது போல இது குடும்பம் தான். நாம் எல்லாரும் ஒரே குடும்பம் தான். கடந்த தேர்தலில் பா.ஜ.,வை ஓட ஓட விரட்டி அடித்தும் மோடி திருந்தவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் அவர் வருகிறார். கடந்த முறை சேலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வை தான் தேர்வு செய்து அனுப்பினீர்கள்.
சட்டசபை தேர்தலின் போது நான் தெருத்தெருவாக வந்தேன். ஆனால், எடப்பாடியில் பெரிய நாமம் போட்டு அனுப்பிவிட்டீர்கள். 2021ல் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஸ்டாலின் முதல்வர் ஆனார். யார் காலிலும் அவர் விழவில்லை. எங்கேயாவது தவழ்ந்து போனாரா. அப்படிப் போனவர், உங்கள் சட்டசபை உறுப்பினர் தான்.
அவரைப் போய் எம்.எல்.ஏவாக தேர்வு செய்துவிட்டீர்களே. உலக வரலாற்றில் இப்படியொரு ஒரு மனிதர் முதல்வர் ஆனார் என்றால் அது இவர் மட்டும் தான். அவர் சசிகலா காலிவ் விழும் காட்சி, உலகப் பிரசித்தி பெற்ற புகைப்படம். அவரை முதல்வர் ஆக்கியவர் சசிகலா. அவரையே யார் இந்த சசிகலா எனக் கேள்வி கேட்டவர்.
நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் உரிமைத் தொகையை நிறைவேற்றினார். 1.60 கோடி மகளிர் விண்ணப்பித்தனர். மாதம் 15ம் தேதி பணம் சென்று சேருகிறது. சிலருக்கு வரவில்லை. விண்ணப்பம் சரிசெய்யப்பட்டு 6, 7 மாதத்தில் கண்டிப்பாக வந்து சேரும்.
எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். மோடி உருப்படியாக எதாவது செய்தாரா. கோவிட் வந்தபோது ஆறுதலாவது கொடுத்தாரா. மிக்ஜாம் புயலுக்கான இழப்பீட்டில் ஒரு பைசாவை கூட மோடி கொடுக்கவில்லை. பா.ஜ., ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் வந்துவிட்டது. தமிழகத்துக்கு மட்டும் நிதி கிடையாது என்றனர்.
பிரதமர் மோடியோடு இருக்கும் படத்தில் பழனிசாமி சிரிப்பதைப் பார்த்தால் டூத் பேஸ்ட் விளம்பரம் போல இருக்கிறது. சிரிப்பது தப்பில்லை. நான் உருவக் கேலி செய்யவில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு திருப்தியோடு சிரிக்க வேண்டும்.
எடப்பாடி தொகுதியில் இருந்து முதல்வர் ஆக நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அனைத்து உரிமைகளையும் பா.ஜ., அரசிடம் அடகு வைத்தது தான் ஒரே சாதனை. இன்று வரையில் மோடிக்கு பயந்து அரசியல் செய்கிறார். பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்கிறார். 'எய்ம்ஸ் எப்போது கட்டுவீர்கள்?' எனக் கேட்டால் பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
'பிரிந்திருப்பது போல பிரிந்திருக்கலாம். தேர்தலுக்குப் பிறகு இணைந்து கொள்வோம்' என அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் பேசி வைத்து செயல்படுகின்றனர். சேலம் பகுதியில் வன்னிய மக்கள் அதிகமாக உள்ளனர். சமூக நீதி என்றால் அனைவரும் சமம். ஆனால், பா.ம.க.,வுக்கு பெட்டி மாறினால் அனைத்தும் மாறிவிடும்.
சமூக நீதியை சொல்லி பா.ம.க.,வை ராமதாஸ் ஆரம்பித்தார். ஆனால், மனுநீதி பேசும் பாஜ,. உடன் கூட்டணி வைத்திருக்கிறார். 'ராமர் கோயிலை கட்டிவிட்டோம்' என்கிறார்கள். தமிழக மக்கள் சாமி கும்பிடுவார்கள். தேர்தல் வந்தால் உதயசூரியனுக்குத் தான் ஓட்டு போடுவார்கள்.
வன்னிய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் கருணாநிதி சேர்த்தார். பா.ம.க.,வும் பா.ஜ.,வும் சேர்ந்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து