உதயநிதி வருகைக்காக சாலைகள் சேதம்: பறக்கும் படையிடம் தி.மு.க., வாக்குவாதம்
துாத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி இரு நாட்கள் பிரசாரம் செய்தார். உதயநிதியை வரவேற்கும் விதமாக, தி.மு.க.,வினர் திருச்செந்துார் ரத வீதிகளில் ராட்சத குழாய்களில், 30 அடி உயரமுள்ள கொடிக்கம்பங்களை நட்டனர். இதற்காக சாலையின் ஓரம், 3 அடி ஆழத்திற்கு சாலையை உடைத்து குழி தோண்டினர்.
அதைப் பார்த்த அப்பகுதி மக்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தனர். பறக்கும் படையினர் அப்பகுதிக்கு சென்று, சாலையை சேதப்படுத்தும் பணியை தடுத்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட தி.மு.க.,வினர் சம்பவ இடத்திற்கு சென்று, பறக்கும் படை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'சாலையில் கொடி நட அனுமதி வாங்கி உள்ளோம்; சேதப்படுத்திய சாலையை புதுப்பித்து கொடுப்பதற்கும் அனுமதி வாங்கி உள்ளோம்' என, கூறினர்.
அதற்கான தேர்தல் கமிஷன் அனுமதி கடிதத்தை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
தொடர்ந்து, மீண்டும் தி.மு.க.,வினர் சாலையை சேதப்படுத்தி கொடிகளை நட்டனர். இந்த செயல்,மக்களிடையே அதிருப்தியைஏற்படுத்தியது.
வாசகர் கருத்து