உதயநிதி வேட்பாளருக்கு சிக்கல்: ஒதுங்கிய அமைச்சரை களமிறக்கிய தலைமை
அமைச்சர் உதயநிதியால் பரிந்துரைக்கப்பட்டு வேட்பாளர் ஆனதால், அவருக்கு லோக்கல் அமைச்சர் ஈரோடு முத்துசாமி தேர்தல் வேலை பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு, கட்சி மேலிடம் வரை சென்றுள்ளது. இதையடுத்து, மேலிடத்தில் இருந்து இடித்துரைத்ததால், தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் களம் இறங்கியதாக லோக்கல் தி.மு.க.,வினர் பரபரப்பாக பேசுகின்றனர்.
கொங்கு மண்டல தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், இளைஞணி மாநில நிர்வாகியாக இருக்கிறார். அவரை ஈரோடு தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்க, அமைச்சர் உதயநிதி பின்புலமாக இருந்து கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு 'சீட்' கிடைத்தது. அதனால், மாவட்டச் செயலரும், அமைச்சருமான முத்துசாமி பரிந்துரைத்த வேட்பாளருக்கு வாய்ப்பு கிட்டவில்லை.
இதனால், கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் முத்துசாமி. மேலிட சிபாரிசோடு வேட்பாளர் ஆனதால், லோக்கல் அமைச்சரை பிரகாசும் கண்டு கொள்ளாமல் இருந்தார். தேர்தல் வேலைகளை தன்னிச்சையாக பார்த்தவர், அமைச்சர் முத்துசாமியை பிரசாரத்திற்கு முறையாக அழைக்கவில்லை. இளைஞரணி நிர்வாகிகளுடன் தனி ஆவர்த்தனம் செய்தார்.
இதே நிலை சென்றால், தேர்தலில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது எனவும்; தொடர்ந்து ஈரோட்டில் தி.மு.க.,வுக்கு இறங்கு முகமாக உள்ளது என்றும் லோக்கல் தி.மு.க.,வினர் கட்சித் தலைமைக்கு தகவல் அனுப்பினர்.
இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி உட்பட யாரையும் பாராட்டி பேசவில்லை. பின், அவரை தனியாக அழைத்து சில அறிவுரைகள் கூறியுள்ளார்.
அதேபோல, வேட்பாளர் பிரகாசையும் அழைத்து, அமைச்சர் முத்துசாமியை மரியாதையுடன் அணுக வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.
'கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக, கவுண்டர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், தேர்தல் பணிகளை பொறுப்பேற்று நடத்துங்கள். டி.ஆர்.பி.ராஜாவுடன் இணைந்து செயல்படுங்கள். உங்கள் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதை இழந்து விட வேண்டாம். ஈரோடு, கோவை இரு தொகுதிகளிலும் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள். நம்பிக்கைக்கு குந்தகம் இல்லாமல் பாடுபட வேண்டும்' என, முத்துசாமியிடம் முதல்வர் கூறியுள்ளார்.
அதுவரை, தேர்தல் பணியில் சுணக்கமாக இருந்த முத்துசாமி, கோவையில் உள்ள சூலுார், முத்துக்கவுண்டன் புதுார், கிணத்துக்கடவு, மதுக்கரை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். அப்போது கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், அண்ணாமலைக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
'பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலை வெற்றி பெற வேண்டும். சி.சுப்பிரமணியத்திற்கு பின், அண்ணாமலை டில்லி அரசியலில் முக்கிய தலைவராக உருவாக இருப்பதை தடுக்காமல் இருக்க வேண்டும். உங்களுக்கு அண்ணாமலை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வு இல்லையா?' என, கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த முத்துசாமி, 'இங்கே சமுதாயமெல்லாம் கிடையாது. தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். களமிறங்கி செயல்படுகிறேன். கட்சி வெற்றி பெற வேண்டும்; அவ்வளவுதான்' என்று சிம்பிளாக கூறிச் சென்றுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து