எல்லாருக்கும் ஆயிரம் ரூபாய் வேணுமா... : உதயநிதி டென்ஷன்
"கொரோனா காலத்தில் நம்மை மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால், கோவிட் ஊசியைப் போட்டுக் கொண்டு தைரியமாக கோவிட் வார்டுக்கு சென்ற முதல்வர் என்றால், இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும் தான்" என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பட்டுக்கோட்டையில் தி.மு.க., வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயநிதி பேசியவதாவது:
காஸ் சிலிண்டர் விலையை 1200 ரூபாய் வரை உயர்த்திய மோடி, தேர்தல் வருவதால் 100 ரூபாய் வரையில் குறைத்து மக்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் காஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு கொடுப்போம்.
யாருடைய காலையும் பிடித்து ஸ்டாலின், முதல்வர் ஆகவில்லை. ஆனால், சசிகலா காலைப் பிடித்து முதல்வர் ஆனதை பழனிசாமி பெருமையாக சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேட்கிறார். சசிகலா காலையே வாரிவிட்டவர் தான் பழனிசாமி.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தார். 2010ல் நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்துவிட்டது. ஆனால், ஆட்சியில் இருந்த கருணாநிதி அதை அனுமதிக்கவில்லை. நுழைவுத் தேர்வே வரக் கூடாது என்றார்.
ஜெயலலிதா இருந்த வரையில் நீட் தேர்வு வரவில்லை. அவரை ஜெயலலிதாவை 100 நாள் மருத்துவமனையில் வைத்திருந்தனர். அவர் மரணத்துக்குக் காரணமானவர்களை ஸ்டாலின் சிறைக்கு அனுப்புவார். நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதாவால் மருத்துவம் படிக்கவில்லை.
அவர் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1720 ( அனிதா வாங்கிய மதிப்பெண் 1176) வாங்கினார். இந்நேரம் அனிதா உயிருடன் இருந்திருந்தால் டாக்டர் ஆகியிருப்பார்.
சி.ஏ.ஏ சட்டத்தை அ.தி.மு.க., ஆதரவுடன் பா.ஜ., கொண்டு வந்தது. அதை திமுக எதிர்த்தது. 'இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் சி.ஏ.ஏ., வரட்டும். தமிழகத்தில் அனுமதிக்க மாட்டேன்' என முதல்வர் கூறிவிட்டார்.
கொரோனா காலத்தில் நம்மை மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால், கோவிட் ஊசியைப் போட்டுக் கொண்டு தைரியமாக கோவிட் வார்டுக்கு சென்ற முதல்வர் என்றால், இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும் தான்.
கோவிட் ஊசி போட்ட பிறகு நடிகர் விவேக் 2 நாளில் இறந்துவிட்டார். 'அது உண்மையல்ல, கோவிட் ஊசி போட்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்' என தைரியம் கொடுத்து அதிக ஊசிகளை போட்டுக் கொண்டது தமிழக மக்கள் தான்.
அப்போது ஆட்சிப் பொறுப்பேற்று கடும் நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை கொடுத்தார். இதனால் மாதம் 850 முதல் 900 வரையில் சேமிக்கிறார்கள். ஒரு திட்டத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என பெண்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
உயர்கல்வி படிக்கும் மகளிருக்கு கல்வி ஊக்கத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை கொடுக்கிறோம். இதை பக்கத்து மாநிலங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தியாவில் படித்து முடித்து வேலைக்குப் போகும் பெண்களின் சதவீதம் 27. ஆனால், அதுவே தமிழகத்தில் 54 சதவீதமாக உள்ளது.
காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கி வைத்தது தி.மு.க., அரசு தான். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழகத்தின் காலை உணவுத் திட்டத்தை பாராட்டியிருக்கிறார்.
மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் சென்று சேர்ந்துள்ளது. தற்போது வரை 70, 80 சதவீதம் பேருக்கு சென்றுவிட்டது. தஞ்சையில் 4.22 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போகிறது. இதற்காக விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையை கட்டாயம் முதல்வர் கொடுப்பார்.
(உடனே கூட்டத்தில் ஒருவர், "எல்லாருக்கும் ஆயிரம் ரூபாயை கொடுங்க" என்றார்)
"எல்லாருக்கும் ஆயிரம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மத்திய அரசை மாற்ற வேண்டும். அப்படி செய்தால் அனைவருக்கும் ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் கொடுப்பார்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
வாசகர் கருத்து