மோடி 3.0 அரசில் 71 அமைச்சர்கள் பதவியேற்பு! : நேருவின் சாதனையை சமன் செய்தும் பெருமை
புதுடில்லி,: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், அவரை தவிர, 71 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். கூட்டணி கட்சிகளில், 11 பேருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரின் கட்சிகளில் தலா இரண்டு பேருக்கும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த நேருவின் சாதனையை, 62 ஆண்டுகளுக்கு பின், சமன் செய்த பெருமையை மோடி பெற்றுள்ளார்.
கடந்த, 2014ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். 2019 லோக்சபா தேர்தலிலும், இந்தக் கூட்டணி வென்று இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார்.
ஆதிக்கம்
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்றது. இதன் வாயிலாக, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக பதவியேற்றார்.
கடந்த, 1962ல், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில், தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த சாதனையை, மோடி சமன் செய்துள்ளார். நேரு, 1952, 1957 மற்றும் 1962 தேர்தல்களில் வென்று பிரதமராக பதவியேற்றார்.
அந்தத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், தற்போது, 700க்கும் மேற்பட்ட கட்சிகள், பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம், பெருகியுள்ள மக்கள் தொகை, பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு இடையே, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, பிரதமர் மோடி சாதனை புரிந்துள்ளார்.
அதுவும், 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்ட நிலையில், தனிப்பெரும்பான்மையை விட அதிக இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது.
உலகமே எதிர்நோக்கிய இந்த தேர்தலை தொடர்ந்து, 10 ஆண்டு இடைவெளிக்கு பின், நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
பிரதமர் மோடி மீதான அபிமானம், நம் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
வெளிநாட்டு துாதர்கள்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு, செஷல்ஸ் துணை அதிபர் அஹமது ஆபிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 9,000க்கும் மேற்பட்ட, பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மூத்த நீதிபதிகள், பல கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு துாதர்கள், மடாதிபதிகள் என, பலரும் இதில் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மரியாதை
முன்னதாக டில்லியில் மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட் சென்று, மோடி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து போர் நினைவிடத்திலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலில் பிரதமர் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்கள், ஐந்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.
கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கூட்டணி கட்சிகளான பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு தலா, இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இரவு 7:15க்கு துவங்கிய பதவியேற்பு விழா, இரவு, 9:50 வரை நடந்தது. புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோருக்கான இலாகா ஒதுக்கீடுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனவால், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், உ.பி., முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங் மற்றும் குஜராத் முதல்வராக இருந்த மோடியுடன் சேர்ந்து ஏழு முன்னாள் முதல்வர்கள் நேற்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் தொகுதியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு, இந்த அமைச்சரவையின் இளம் அமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார். இவருக்கு, 36 வயதாகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், முன்னாள் மத்திய அமைச்சர் எர்ரன் நாயுடுவின் மகன்.
முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மோடி அணிந்து வரும் ஆடைகளும், வண்ண தலைப்பாகைகளும் செய்திகளில் பிரதான இடம் பெறுவது வழக்கம். கடந்த 2014ல் முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றபோது, 'லினன்' துணியில் நெய்யப்பட்ட, 'க்ரீம்' நிற குர்தா - பைஜாமாவின் மேல், தங்க நிற ஜாக்கெட் அணிந்து வந்தார். கடந்த 2019 பதவி ஏற்பின் போது, பழுப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்தார். நேற்று நடந்த பதவி ஏற்பு நிகழ்வுக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளை நிற குர்தா - பைஜாமாவில், அடர் நீல நிற ஜாக்கெட்டும் கருப்பு நிற ஷூ அணிந்திருந்தார்.
பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில், உ.பி.,யின் அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். ஹிமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்புர் தொகுதியில் வென்ற அனுராக் தாக்குர், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரானார். மஹாராஷ்டிராவின் ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியில் வென்ற பா.ஜ.,வின் நாராயண் ரானே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரானார். இந்த முறை, ஸ்மிருதி இரானியை தவிர மற்ற இருவரும் வெற்றி பெற்றனர். இவர்கள் மூவருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோடி 3.0 அரசில் இவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த பா.ஜ.,வின் மீனாட்சி லேகி மற்றும் சமூக நீதித்துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், திருவனந்தபுரத்தில் காங்., வேட்பாளர் சசி தரூரிடம் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் இம்முறை அமைச்சரவையில் இடமில்லை. பார்தி பவார், நிரஞ்சன் ஜ்யோதி, தர்ஷனா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கபடவில்லை.
நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். அவருடன், 71 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றது. இந்த பதவியேற்பு விழாவில், திருநங்கையர், துாய்மைப் பணியாளர்கள், புதிய பார்லி., கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில், திருநங்கையர் பங்கேற்பது இதுவே முதன்முறை.
அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களில் 33 பேர் மத்திய அமைச்சரவைக்கு புதுமுகங்கள். பா.ஜ.,வில் இருந்து ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், ம.பி., முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பா.ஜ., பொதுச் செயலர் பண்டி சஞ்சய் குமார், நடிகர் சுரேஷ் கோபி, மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகந்தா மஜூம்தார், மஹாராஷ்டிராவின் ரக் ஷா கட்சே, பஞ்சாபின் ரவ்நீத் சிங் பிட்டு, உத்தரகண்டை சேர்ந்த அஜய் டம்டா, உ.பி.,யின் ஜிதின் பிரசாதா, டில்லியின் ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஜார்க்கண்டின் அன்னபூர்ணா தேவி ஆகியோர் புதுமுகங்கள். கூட்டணி கட்சிகளில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, உ.பி.,யின் ராஷ்ட்ரீய லோக் தளத்தின் ஜெயந்த் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் ஜிதன் ராம் மஞ்சி, தெலுங்கு தேசத்தின் ராம் மோகன் நாயுடு, லோக் ஜனசக்தியின் சிராக் பஸ்வான் உட்பட ஏழு பேர் முதல் முறையாக அமைச்சராகி உள்ளனர்.
'மோடி 3.0' அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். இதில், 11 பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 27, எஸ்.சி., 10, எஸ்.டி., ஐந்து, சிறுபான்மையினர் ஐந்து பேருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 18 மூத்த அமைச்சர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து