ராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?: ஓபிஎஸ் வெற்றியை பாதித்ததா?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அதே பெயரில் மொத்தம் 5 பேர் களமிறங்கினர். அவர்களின் ஓட்டு நிலவரம் வெளியாகி வருகின்றன. இவர்கள் ஓட்டுகளை சேர்த்தாலும் ஓபிஎஸ் வெற்றிக்கு உதவாது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 'பலாப்பழம்'  சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில் தனது பலத்தை நிரூபித்து அதிமுக.,வினரை ஒன்றிணைத்து கட்சியை கைப்பற்றிவிடலாம் என எண்ணி இருந்தார். ஆனால், அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 4 பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம், இடைஞ்சல்கள் வந்தாலும் வெற்றி பெறுவோம் என களப்பணியாற்றினார்.
இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டுவரும் ஓட்டுகளில், மதியம் 12:30 மணி நிலவரப்படி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 53,167 ஓட்டுகளுடன் 2வது இடத்தில் (41,260 ஓட்டுகள் வித்தியாசம்) உள்ளார். ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 573 ஓட்டுகளும், மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் என்பவர் 433 ஓட்டுகளும், ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 314 ஓட்டுகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 107 ஓட்டுகளும் பெற்றனர். 
இந்த தொகுதியில் நோட்டாவுக்கு கூட 1230 ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், 'டம்மி'யாக களமிறங்கி 4 பேரும் அதில் பாதியை கூட பெறவில்லை. அதே சமயம் இந்த டம்மி பன்னீர்செல்வங்களின் ஓட்டுகளை மொத்தமாக எண்ணினாலும். ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது.


 
                   
                   
                   
                   
                  

 
                       
                       
                       
                       
                       
                      
வாசகர் கருத்து