சதுரங்கவேட்டை சினிமா போல ஆசையை துாண்டும் உதயநிதி 'உருட்டுகள்'

சதுரங்க வேட்டை படம் போல், வாக்காளர்களின் ஆசையை துாண்டும் வகையில், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் தன் பிரசாரத்தில், பிரதமர் மோடியை குறிவைத்து, தாக்கி பேசுவதை வழக்கமாக கொண்டுஉள்ளார்.

அதேபோல், சாத்தியம் இல்லாத விஷயங்களை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் பெரம்பலுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அருணுக்காக பிரசாரம் செய்தார். அப்போது, 'தி.மு.க., வேட்பாளரை, 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்.

'அப்படி செய்தால், மாதம் இருமுறை இந்தத் தொகுதிக்கு நானே வந்து, அதிகாரிகளை அழைத்து, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்' என்று உதயநிதி உறுதி அளித்துப் பேசினார்.

அதேபோல், 'கரூர் வேட்பாளர் ஜோதிமணியை' 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், மாதம் இருமுறை தொகுதிக்கு அதிகாரிகளுடன் நானே வந்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்' என்று உதயநிதி வாக்குறுதி அளித்தார்.

போகும் இடங்களில் எல்லாம் இப்படியே வாக்குறுதி அளித்து வருகிறார். தற்போது, தி.மு.க., கூட்டணியில், 38 பேர் எம்.பி.,க் களாக உள்ளனர். அவர்களில், 25 பேர் வெற்றி பெற்றால் கூட, மாதத்துக்கு 50 நாட்கள் உதயநிதி தொகுதி தொகுதியாக செல்ல வேண்டும்.

ஏற்கனவே தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் தொகுதி பக்கமே வரவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், மாதம் இருமுறை, தொகுதிக்கு வருவேன் என்று உதயநிதி வாக்குறுதி அளிப்பதை கேட்டு மக்கள் சிரிக்கின்றனர்.

அதேபோல், எந்த தி.மு.க., வேட்பாளரும், 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போவதில்லை என்பது உதயநிதிக்கு நன்கு தெரிந்தும், போகிற போக்கில் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார்.

இப்படியாக சாத்தியம் இல்லாத விஷயங்களை கூறி, வாக்காளர்கள் மத்தியில், சதுரங்க வேட்டை சினிமா போல் ஆசையை துாண்டி அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்கிறார்.

மேலும், 42 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் 1,000 உதவித்தொகை என்று, பல்வேறு வாக்குறுதிகளை அமைச்சர் உதயநிதி கொடுக்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான, நீட் தேர்வு ரத்து, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய பென்ஷன் திட்டம் அமல், காஸ் மானியம் 100 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல் தான், இந்த தேர்தல் பிரசாரத்திலும் உதயநிதி சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

தேர்தலில் மக்களை எப்படியாவது தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வைத்து விட வேண்டும் என்பதை மனதில் வைத்து, உதயநிதி, தன் பிரசாரத்தில், சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை அளித்து வருவதை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரே விரும்பவில்லை என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்