Advertisement

ஸ்டாலினிடம் கேட்பது நியாயமா: ராமதாஸுக்கு உதயநிதி கேள்வி

"அரசியல் அமைப்புச் சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது மத்திய அரசின் வேலை. ராமதாஸ் தனது நண்பரான மோடியிடம் கேட்காமல் ஸ்டாலினிடம் கேட்கிறார்" என, உதயநிதி விமர்சித்தார்.

தருமபுரியில் தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து உதயநிதி பேசியதாவது

தமிழக மக்களுக்கு தொடர்ந்து மோடி வேட்டு வைத்து வருகிறார். நீங்கள் போடும் ஓடும் போட்டு அவருக்கு வைக்கக் கூடிய வேட்டு. கடந்த முறை செந்தில்குமாருக்காக பிரசாரம் செய்தேன். 72,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

இந்த முறை மணிக்கு தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது. அவரை குறைந்தது 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்திலாவது வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த முறை எதிரணியினர் ஒன்று திரண்டு வந்தனர். இந்தமுறை எதிராளிகள் எல்லாம் பிரிந்து வருகின்றனர். அதனால் தான் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தைப் போல கனடாவிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் அரசு இருக்கிறது.

தேர்தல் முடிந்ததும் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வந்து சேரும். பான் கார்டு, ஆதார் கார்டு என சில சோதனைகள் முடிந்து 5, 6 மாதங்களில் வழங்கி விடுவோம்.

ராமதாஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். 1989ல் வன்னியர்கள் உள்பட பல சமூகங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி கொடுத்தார். 1987ல் இடஒதுக்கீடு கேட்டுப் போராடிய 21 வன்னியர்களை துப்பாக்கியால் அ.தி.மு.க., அரசு சுட்டுக் கொன்றது.

சமூக நீதி பேசும் ராமதாஸ், மனு நீதி பேசும் பா.ஜ., உடன் கூட்டணி வைத்தது நியாயம் இல்லை. அனைவரும் சமம் என்பது தான் சமூக நீதி. 6 மாசத்துக்கு முன்பு டில்லியில் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தனர். இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதியை அழைக்கவில்லை. அவர் கணவரை இழந்தவர் என்பதால் அழைக்க இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராமதாஸ் பேசி வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடக்காததற்கு ஸ்டாலினை குறை சொல்கிறார். அரசியல் அமைப்புச் சட்டரீதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது மத்திய அரசின் வேலை. அவரின் நண்பரான மோடியிடம் கேட்காமல் ஸ்டாலினிடம் கேட்கிறார்.

10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என ஸ்டாலினை ராமதாஸ் விமர்சிக்கிறார். வன்னியர்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பின் கடைசி நாளில் உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். அது முறையாக கொண்டு வரப்படவில்லை. அதனால் நீதிமன்றம் ரத்து செய்தது. தி.மு.க., அரசு இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது. விரைவில் சட்டப்போராட்டம் நடத்தி உள்ஒதுக்கீட்டை முதல்வர் அமல்படுத்துவார்.

மணிப்பூரில் 5 மாதங்களாக பிரச்னை நடந்து வருகிறது. அங்கு 2 குழுவினர் அடித்துக் கொள்கின்றனர். ஆறு மாதகாலமாக கலவரம் நடக்கிறது. அந்தப் பக்கம் கூட மோடி எட்டிப் பார்க்கவில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் அதே போன்ற நிலை வரும்.

மோடியைப் பற்றிப் பேசினால் பழனிசாமிக்கு கோபம் கூருகிறது. காரணம், இவர்களுக்கு உள்ள கள்ளக்காதல் தான். இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கின்றனர்.

பா.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பழனிசாமியா. அவர் சசிகலாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் துரோகம் செய்தார். இந்த 2 கூட்டணிகளையும் விரட்டி அடிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்