கிருஷ்ணகிரி வேட்பாளர்கள் காட்டில் பணமழை: கொட்டி கொடுக்கும் குவாரிகள், கிரஷர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. குறிப்பாக, கிரானைட், மாங்கூழ் தொழிற்சாலைகள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சி வேட்பாளர்கள் பண மழையில் நனைகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மாவட்டத்தில் உள்ள கல் குவாரி, கிரஷர்கள் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 300க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன.
அதில், 110க்கும் குறைவான கல் குவாரிகள் மட்டுமே உரிய அனுமதியுடன் செயல்படுகின்றன. மற்றவை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சில துறைகளின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் இயங்குகின்றன.
இவற்றில் பல குவாரிகள், அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளின் பினாமிகள் பெயரில் உள்ளன. அதனால், இவற்றை நடத்துவோர் அரசு அதிகாரிகள் துணையுடன், கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் பல ஆயிரம் டன் கனிமவளங்களை டிப்பர் லாரியில் கடத்தி செல்கின்றனர்.
அரசு குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கனிம வளங்களை வெட்டி எடுத்து கருப்பு பணமாக சம்பாதிக்கின்றனர். அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை சரிக்கட்ட தேர்தல் நேரத்தை பயன்படுத்துகின்றனர்.
அதனால், தேர்தல் வரும் நேரத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், தங்கள் சார்ந்த அரசியல் கட்சி வேட்பாளர் களுக்கு கோடிகளில் பணம் வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை நடத்தி வருவோர், தேர்தல் நேரத்தில் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு பணத்தை வாரி வழங்குகின்றனர்.
இப்படி, தொழிற்சாலைகள் மற்றும் கிரானைட், கல்குவாரி, கிரஷர் மூலமாக வேட்பாளர்களுக்கு கோடிகளில் பணம் கிடைப்பதால், அவர்கள் காட்டில் பண மழை பொழிகிறது. தேர்தல் செலவிற்கு தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியும், வேட்பாளர்களுக்கு பணத்தை கொடுக்கிறது.
இதனால், முன்னணி அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும், தேர்தலில் நின்று சொந்த பணத்தை இழப்பதில்லை. மாறாக, தேர்தலில் நிற்பதால் அவர்களுக்கு கோடிகளில் பணம் மிச்சமாகிறது என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து