தினகரனுக்கு ஓ.பி.எஸ்., கொடுக்கும் நற்சான்று நகைப்புக்குரியது: தங்கதமிழ்செல்வன் பேட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். 2001ல் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, ஆண்டிபட்டியில் போட்டியிடுவதற்காக தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர் தங்க தமிழ்செல்வன். இவர் தன் வெளிப்படையான பேச்சால் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக வலம் வருபவர். 2019ல் அ.ம.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்து மாவட்ட செயலராக உள்ளார். தற்போது தேனி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர். அவர் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
உங்களுக்கு நேரடி போட்டி அ.தி.மு.க.,வா, அ.ம.மு.க.,வா?
தி.மு.க., பெரிய கட்சி. அதனுடன் 13 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியிடம் 60 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. அதனால் 39 தொகுதிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த சூழலில் எங்களுக்கு எதிரி யார் என மக்கள் முடிவு செய்வர்.
நீங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியில் போட்டியிடுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். வாக்காளர்களிடம் நிரந்தர அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மக்களிடம் தகவல்களை உடனே கொண்டு சேர்க்கின்றன. ஒரு நிமிடத்தில் யார் வேட்பாளர், எந்த கட்சி என தெரிந்து கொள்கின்றனர். 'இண்டியா' கூட்டணி இந்தியா முழுதும் வெற்றி பெறும் என்கிற விபரத்தை பாமர மக்கள் டீ கடையில் பேசுறாங்க. தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள், கட்சி செயல்பாடுகள் வெற்றியை தீர்மானிக்கும்.
உங்கள் முன்னாள் நண்பர் தினகரனை எதிர்த்து இப்போது போட்டியிடுகிறீர்களே...
நான் போட்டியிடவில்லை. அவர்தான் என்னை எதிர்த்து போட்டியிடுகிறார். களத்தில் சந்திப்போம். வெற்றி, தோல்வி யாருக்குன்னு மக்கள் முடிவு செய்யட்டும்.
பன்னீர்செல்வம் தேனி தொகுதியை விட்டுவிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட என்ன காரணம்?
நான் உள்ளூர். என் சொந்த ஊர் நாராயணத்தேவன்பட்டி. தி.மு.க., வேட்பாளராக உள்ளேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்வர். இங்கு தொண்டர் பலம் அவருக்கு அதிகமாக இருக்கும் என்பதை நிரூபிக்கணும் என நினைத்திருந்தால், தேனியை தேர்வு செய்திருக்க வேண்டும்.
மூன்று முறை முதல்வர், 15 ஆண்டுகள் அமைச்சர், அவர் கோலோச்சி கொண்டிருந்த இடம் தேனி தொகுதி. இங்கு போட்டியிட்டு அவர் பலத்தை காண்பித்திருக்க வேண்டும். அடிப்படையே இல்லாத ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் என்றால், தினகரனும், பன்னீர்செல்வமும் சேர்ந்து நாடகமாடுகின்றனர்.
ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் 'டோக்கன்' வழங்கியதில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என தினகரன் கூறியிருக்கிறாரே...
மோசடி செய்து 'டோக்கன்' கொடுத்தார் என்பதை ஒப்புக் கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். இதுவரை 'டோக்கன்' கொடுக்கவில்லை, நான் நேர்மையாக வெற்றி பெற்றேன் என கூறிய தினகரன், 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம் என ஒப்புக்கொண்டார்.
இது போன்ற வேலையை நான் பார்க்க மாட்டேன். மக்களை சந்திப்பேன், ஓட்டு கேட்பேன், தினகரன் போல் குறுக்குவழியில் மக்களை திசைதிருப்பும் வேலை எனக்கு பிடிக்காது. தவறான தகவலை பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறார்.
பிரசாரத்திற்கு செல்லும் இடத்தில் உரிமை தொகை கிடைக்கவில்லை என எதிர்ப்பு குரல் கிளம்புகிறதே...
தமிழகத்தில், 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 1.50 கோடி பேர்தான் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தனர். 1.25 கோடி பேர் உரிமைத் தொகை பெறுகின்றனர். 25 லட்சம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், 1 கோடி பேர் உதவித் தொகை வேண்டாம் என்றனர். என் தொகுதியில் பரிசீலனையில் உள்ள மனுக்கள் மீது தேர்தல் முடிந்ததும் பெற்று தருகிறேன் என, உறுதி கூறி வருகிறேன்.
தி.மு.க., சட்டசபை தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் பல நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனரே?
'நீட்' தேர்வுக்கு மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும். 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் இருந்தால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை ஏற்று கொள்ளலாம். தற்போது மத்தியில் பா.ஜ., அரசு உள்ளது. எங்களுக்கு எதிரான மத்திய அரசு. நாங்கள் சட்டசபையில் மசோதா நிறைவேற்றினாலும், அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நிச்சயமாக 'நீட்' விலக்கு பெறுவோம்.
அமைச்சர் மூர்த்திக்கு உள்ள உணர்வு, போடி தொகுதி நிர்வாகிகளுக்கு இல்லை என கட்சி கூட்டத்தில் ஆதங்கப்பட்டுபேசியது ஏன்?
போடி தொகுதியில் பன்னீர்செல்வம் என்னை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வர் ஆவார் என முடிவு தெரிந்தது. ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் போடியில் வெற்றி பெறுகிறார். எனவேதான் நான் கட்சி நிர்வாகிகளிடம், 'நீங்கதான் வேலை செய்து என்னை வெற்றி பெற வைத்திருக்கணும். ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். தற்போது லோக்சபாவில் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இம்முறையாவது நன்கு உழைத்து வெற்றி பெறவையுங்கள். ஐந்தாண்டு பலனை அனுபவிப்பீர்கள்' என்றேன்.
தி.மு.க.,வின் உட்கட்சி பூசல் பிரசாரத்தில் எதிரொலிக்கிறதா?
உட்கட்சி பூசலே இல்லையே. 2019ல் தி.மு.க.,வில் சேர்ந்தேன். உழைப்பவருக்கு கட்சி முன்னுரிமை தருகிறது. அதை எப்படி உட்கட்சி பூசல்னு சொல்ல முடியும்? கீழ் மட்டத்தில் தினசரி சென்று மக்களை சந்திக்கணும். நல்லது, கெட்டதில் பங்கேற்கணும். சும்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் கட்சியில் பொறுப்பு கிடைக்காது. மக்களை சந்தித்து களப்பணி செய்வதால் தலைமை வரை செயல்பாடு தெரிந்து வேட்பாளராக தேர்வு செய்கின்றனர்.
ஓ.பி.எஸ்.,சும் நானும் இணைந்ததே அ.தி.மு.க.,வை மீட்டு தொண்டர்களிடம் கொடுக்கத்தான் என தினகரன் பிரசாரத்தில் கூறி வருகிறோரே?
அ.தி.மு.க.,வை மீட்பது இருவரின் நோக்கமாக இருந்தால் இரண்டு பேரும் ஒருங்கிணைந்து சுயேச்சை சின்னம் பெற்று ஏதாவது ஒரு தொகுதியில் களம் கண்டிருக்க வேண்டும். பா.ஜ., அரசு தினகரனுக்கு சாதகமான சூழலில் இருக்கு. தினகரன் 2019ல் கடுமையாக பா.ஜ.,வை எதிர்த்தார். திஹார் சிறையில் தினகரனை அடைத்த போது, வெளியில் வந்து, 'உண்டு இல்லை'ன்னு பார்ப்பேன் எனக்கூறிய தினகரன் இன்று பா.ஜ., காலில் விழுந்து 2 சீட் பெற்றார். இவர் பா.ஜ., கூட்டணியிலும், பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதனை மக்கள் எப்படி ஏற்பர்? இருவரும் ஒன்று சேர்ந்து என்னை எதிர்த்து கூட போட்டியிட்டு இருக்கலாம்.
தினகரனும், பன்னீர்செல்வமும் இணைந்து பற்றி உங்கள் கருத்து?
முதலில் எதற்கு சண்டையிட்டனர். தற்போது ஏன் இணைந்தனர் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். தினகரனும், சசிகலாவும் நம்பிக்கை துரோகிகள், 'அம்மாவை கொலை செய்தனர்' என தர்மயுத்தம் நடத்தியவர் பன்னீர்செல்வம். ஜெ., இருக்கும்போதே முதல்வர் ஆக வேண்டும் என நினைத்தவர் தினகரன். இது தெரிந்துதான் தினகரனையும், சசிகலாவையும், கட்சியை விட்டே நீக்கினர் என கூறியவர் பன்னீர்செல்வம். இப்போது 'தினகரன் நல்லவர்' என்று சொல்கிறாரே, இதை எவ்வாறு மக்கள் ஏற்பர்?
தேனி எம்.பி., ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டுகள் கூறினீர்கள்; எதையும் நிரூபிக்கவில்லையே?
எம்.பி., பதவியை தந்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வரல. நல்லது கெட்டதுக்கு வரணும். நன்றி சொல்லணும். தொகுதியில் தங்கணும். அவர்தான் அரசியல்வாதி. மூன்றுமே செய்யாமல், இப்போது வந்து நான் நல்லவர் என்றால் மக்கள் எப்படி ஏற்பர்?
தினகரன் பின்னால் சென்று, எம்.எல்.ஏ., பதவியை இழந்து விட்டோமே எனநினைத்தது உண்டா?
அதனை நினைத்து பல நாட்கள் மிகவும் வருத்தம் அடைந்தேன். பழனிசாமி தரப்பில் மந்திரி பதவி தருகிறேன் என அழைப்பு வந்தது. ஆனாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை ஏன் புறக்கணித்தீர்கள்?
ஊழல் செய்தார். நிர்வாகம் சரியில்லை. மக்களிடம் கெட்ட பெயர். லோக்சபா, சட்டசபை தேர்தகளில் தோற்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்து தோற்கின்றனர். எதிர்க்கட்சியாக இருந்து உள்ளாட்சியில் வெற்றி பெற்றதால் முதல்வர் ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்பதை நிரூபித்து விட்டார். அதனால்தான் தி.மு.க.,வில் சேர்ந்தேன்.
வாசகர் கருத்து