Advertisement

தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள்

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் உள்ளனர்.

திருப்பூர் லோக்சபா தொகுதியில் இந்திய கம்யூ., - சுப்பராயன், அ.தி.மு.க., - அருணாச்சலம், பா.ஜ., - முருகானந்தம், நாம் தமிழர் கட்சி - சீதாலட்சுமி உட்பட 13 வேட்பாளர்கள் களமிறங்கினர். நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா



பா.ஜ.,வினர் கூறுகையில், ''பிரசார துவக்கத்தில் இருந்து பா.ஜ., வேட்பாளர் அந்தியூர், கோபி, பவானி, பெருந்துறை போன்ற பகுதிகளில் சூறாவாளியாக பிரசாரம் செய்தார். கிராம பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை தெரியப்படுத்தியும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு பிரத்யேகமான வாக்குறுதி இடம்பெற்றுள்ள பிரதியை வெளியிட்டும் ஓட்டு சேகரித்தார். திருப்பூர் மாநகரிலும் முனைப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.

இளம் வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அவை பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியை காட்டிலும், அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி ஆகிய சட்டசபை தொகுதியில், 70 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவாகியுள்ளது. பா.ஜ.,வுக்கு வெற்றிவாய்ப்பு உறுதி'' என்றனர்.

பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் கூறுகையில், ''திருப்பூர் தொகுதியில் தேர்தல் நேரத்தில் களப்பணியை சிறப்பாக மேற்கொண்டோம். மத்திய அரசின் திட்டம், வெற்றி பெற்ற பின் நிறைவேற்றப்படும் என வாக்குறுதிகளை மக்களிடம் தெரியப்படுத்தி தேர்தலை சந்தித்தோம். கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. எங்களுக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது. இம்முறை வெற்றி வாகை சூடுவோம். தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம், அடுத்து வர உள்ள சட்டசபையில் எதிரொலிக்கும்'' என்றனர்.

இந்திய கம்யூ.,



திருப்பூர் லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே தி.மு.க., வசம் இருந்தது. கூட்டணிக்கட்சியான இந்திய கம்யூ., போட்டியிட்டாலும், தலைமையின் உத்தரவு காரணமாக, தி.மு.க.,வினர் வெற்றிக்காக முனைப்புடன் பாடுபட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., வின் ஆதிக்கம் இருந்த நிலையில், கட்சியினரால் எளிதாக வாக்காளர்களை அணுகி ஓட்டு சேகரிக்க ஏதுவாக அமைந்தது.இந்திய கம்யூ.,வைப் பொறுத்தவரை தொழிற்சங்கத்தினர் ஆர்வமாக களம் இறங்கிப் பணியாற்றினர்.

இந்திய கம்யூ.,வினர் கூறுகையில், ''மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிரான மக்கள் மனநிலை இருந்தது. கடந்த தேர்தலின் போது, பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போது கூட இங்கு எங்கள் கூட்டணி தான் வெற்றி பெற்றது. இந்த முறை தமிழகத்தில் ஆளும் கட்சியின் தலைமையிலான கூட்டணி என்பது எங்களுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக இருந்தது.தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தோம். அரசு திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கு எங்களுக்கு ஏகோபித்த ஆதரவு நிலை தொகுதி முழுவதும் காணப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதியில் பிரசாரம் செய்தனர். முந்தைய பதவிக்காலத்தில் லோக்சபா தொகுதி முழுவதும் செய்த மக்கள் நலப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் எளிதாக வாக்காளர்களை எங்களுக்கு சாதகமாக திருப்பியது. கடந்த தேர்தலில், 5.09 லட்சம் ஓட்டுகள் பெற்று, ஏறத்தாழ, 94 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றோம்.இந்த முறை கூட்டணி கட்சிகளின் கடுமையான உழைப்பு, செய்து முடித்த வளர்ச்சிப் பணிகள் ஆகியன இந்த ஓட்டு வித்தியாசத்தை இரு மடங்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பூர் தொகுதியில் இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயனின் வெற்றி என்பது தேர்தல் ஓட்டுப்பதிவு நாளிலேயே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று'' என்றனர்.

அ.தி.மு.க.,



இரண்டு முறை வென்ற திருப்பூர் தொகுதியை, இத்தேர்தலில் மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என, அ.தி.மு.க., கங்கணம் கட்டி களமிறங்கியது. 'சிட்டிங்' எம்.பி., யின் செயல்பாடுகள்; தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., வின் திட்டங்கள், பனியன் தொழிலில் ஏற்பட்ட சறுக்கல் என, சட்டசபை தொகுதி வாரியாக, பிரச்னையை எடுத்துரைத்து பிரசாரம் நடந்தது.

திருப்பூருக்கு புதுமுகம் என்றாலும், கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை தொகுதிகளில் நன்கு அறிமுகமான அருணாசலம், உற்சாகத்துடன் மூன்று சுற்று பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினார். வரும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், முழு வீச்சில் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க., வில் இருந்து, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 100 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின், நான்கு சட்டசபை தொகுதிகளில் இருந்து, முகவர்கள், நாளை (3ம் தேதி) மதியமே திருப்பூர் வந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம் கூறுகையில், ''அ.தி.மு.க., முகவர்கள் மிக விழிப்புடன் பணியாற்ற வேண்டுமென, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதற்காக, மாவட்ட கட்சி அலுவலகத்தில், 3ம் தேதி (நாளை) காலை, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. ஆறு சட்டசபை தொகுதிகளிலும், முழு ஓத்துழைப்பு அளித்து, கட்சியினர் தேர்தல் பணியை செய்தனர். திருப்பூர் தொகுதியை பொறுத்தவரை, வெற்றி உறுதியாகிவிட்டது. ஆறு சட்டசபை தொகுதிகளிலும், அதிக ஓட்டுக்களை பெறுவோம்; ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றனர்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியினர், அதிக ஓட்டுகளைப் பெறும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நாளை மறுநாள் யார் வெற்றி பெறுவார் என்று தெரிந்துவிடும். வெற்றிபெறும் நம்பிக்கையுடன் இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்