கிருஷ்ணகிரி தேர்தல் பிரசாரம்: கர்நாடகா மதுபான விற்பனை ஜோர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஓட்டு சேகரிப்பின் போது, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நுாற்றுக்கணக்கானோரை உடன் அழைத்து செல்கின்றனர். அவர்களுக்கு தினமும், 500 ரூபாய் வரை தரப்படுகிறது. ஆண்களுக்கு குவார்ட்டர் மதுபாட்டிலும் வழங்குகின்றனர்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், மொத்தமாக மதுபானங்களை விலைக்கு வாங்குவது சிரமம்; அதோடு, குவார்ட்டர் விலை குறைந்தபட்சம், 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான, கர்நாடக மாநிலம் அத்திபள்ளி பகுதியில், ஒரு குவார்ட்டர் பாட்டில், 56 - 60 ரூபாய்க்குள் கிடைக்கிறது. அதனால், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபானங்களை அரசியல் கட்சியினர் கார்களில் மொத்தமாக வாங்கி வந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு கொடுக்கின்றனர்.
மேலும், கர்நாடகா மதுபானங்கள், பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. வினியோகம் செய்வது எளிது; தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் ஆண்கள் பலர், கிடைக்கும் பணத்தை மது வாங்க செலவிடுகின்றனர். அதை குறிவைத்து, கள்ள சந்தையில் மது விற்பனை செய்வோர், கர்நாடகாவில் இருந்து மதுவை மொத்தமாக கடத்தி வந்து, பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களில், மதுபானம் கடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்தல், மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சந்து கடை மது விற்பனை படுஜோராக நடந்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினர் பலர், போதையில் தேர்தல் உலா வருகின்றனர்.
வாசகர் கருத்து