தஞ்சை பெரியகோவில் மீது அச்சம்: அருகில் கூட செல்லாத வேட்பாளர்கள்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த, 2010ம் ஆண்டு, ராஜராஜ சோழனின் ஆயிரமாவது சதயப் பெருவிழா விழா நடந்தது. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலுக்குள் நடந்த 1,000 பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை காண வந்தார். அதன் பின், 2011, 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை சந்தித்தது. கருணாநிதி மீண்டும் பெரிய கோவிலுக்கு வர முடியாமல் போனது.
அப்போது விழாவுக்கு வந்த எம்.பி., ராஜாவுக்கும், '2 ஜி' வழக்கு சிக்கல் உருவானது. அதேபோல், முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா போன்றோரை தற்போது வரை உதாரணமாக கூறி வருகின்றனர். மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனின், சதய விழாவுக்கு கூட, அமைச்சர், எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் வர தயக்கம் காட்டுவது தற்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வந்த தலைவர்கள், வாக்கிங் சென்றனர்; மேடையிலும், வாகனத்திலும் பிரசாரம் செய்தனர். ஆனால் பெரியகோவில் இருக்கும் திசைக்கு கூட போகவில்லை. அதேபோல தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பல கோவில்கள், சர்ச், மசூதி என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்று ஓட்டு கேட்டனர்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.,யாகி விட வேண்டும் என்பதால், பெரியகோவில் பகுதியில் சென்று ஓட்டு கேட்டால், தேர்தலில் வெற்றி பெற மாட்டோமோ என்ற அச்சத்தில், அந்த சாலையை கூட கடந்து சென்று ஓட்டு கேட்கவில்லை.
பகுத்தறிவு பேசுவோரும், இறை நம்பிக்கை கொண்டோரும் கூட இந்த மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கின்றனரே என, அத்தொகுதி மக்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து