'நான் இந்த ஊர்க்காரன்தான்' மன்றாடும் வேட்பாளர்கள்
திருவள்ளூர் தனி தொகுதியில், தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர், சென்னையில் உள்ள கொளத்துார்.
இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியில் நடக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பிரசார கூட்டங்களில், 'நான் பிறந்தது சென்னையாக இருந்தாலும், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு பகுதியில்தான் வளர்ந்தேன். அதனால் நான், இந்த தொகுதியைச் சேர்ந்தவன்தான்' எனக்கூறி, ஓட்டு சேகரித்து வருகிறார்.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, காவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன். பாலகணபதி, திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக திருவள்ளூரில் வசித்தபடி, கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுவே தன் தொகுதி எனவும், செல்லும் இடமெல்லாம் கூறி வருகிறார். சிறுவாபுரியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், பாலகணபதியை மண்ணின் மைந்தன் என, த.மா.கா., தலைவர் வாசன் குறிப்பிட்டு பேசினார்.
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என்பது பேசுபொருளாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைத்து வேட்பாளர்களும் தெளிவாக இருக்கின்றனர் என தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து