கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.,வினரை தவிக்கவிட்ட பொறுப்பு அமைச்சர்
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், தி.மு.க., பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, தேர்தல் பணிகளில் அக்கறை காட்டவில்லை என, அக்கட்சியினர் புலம்புகின்றனர். தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணியின் காங்., வேட்பாளராக கோபிநாத் களமிறங்கியுள்ளார்.
தி.மு.க.,வின் ஆதரவை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ள காங்., வேட்பாளரின் செயல்பாடுகளால், தி.மு.க., மாவட்ட செயலர்கள் மதியழகன், பிரகாஷ் ஆகியோருக்கு கடும் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், தேர்தல் செலவுக்கும் பணம் கொடுக்காமல், கருப்பு கண்ணாடியுடன் ஜம்மென்று வேட்பாளர் கோபிநாத் வெறுங்கையுடன் வந்து சென்றது தான்.
இந்த பிரச்னைகளை சரிக்கட்டும் பொறுப்பில் இருந்த, தி.மு.க., மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, தன் சொந்த மாவட்டமான திண்டுக்கல்லை மட்டுமே கவனித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை கண்டுகொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் உள்ளிட்ட சில நாட்கள் மட்டும் தொகுதியில் தலைகாட்டினார்.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி தொகுதியை காங்.,குக்கு விட்டு கொடுக்க வேண்டாமென நாங்கள் கூறியபோது தலைமை கேட்கவில்லை. தற்போது தேர்தல் செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் காங்., பழி வாங்கியுள்ளது. முடிந்தவரை, தி.மு.க., மாவட்ட செயலர்கள் மட்டுமே செலவு செய்துள்ளனர். மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருக்கு பொறுப்பே இல்லை.
தர்மபுரியின் பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அம்மாவட்டத்தில் நிர்வாகிகளை சரிகட்டி, தேர்தல் பணியை முடுக்கிவிட்டு வெற்றியை தொட்டு விட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.
காங்., வெற்றி பெற்றாலும், ஓட்டு வித்தியாசம் குறைவாக இருக்கும். அப்போதாவது, தி.மு.க., தலைமை உண்மையை புரிந்து கொள்ளுமா என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் புலம்பினர்.
வாசகர் கருத்து