விமான நிலைய விவகாரம் 'பறந்து' தப்பிக்கும் வேட்பாளர்கள்
குறிப்பிட்ட இடங்களுக்கு பிரசாரத்துக்குச் செல்ல பிரதான கட்சியின் வேட்பாளர்கள் தவிர்க்கின்றனர். அந்தப் பகுதிகளுக்கு ஓட்டுக் கேட்டு செல்லும்போது, மக்கள் எதிர்ப்பை சமாளிக்க திராணி இல்லாமல் பிரசாரத்தை தவிர்ப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். அப்படி அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை புறக்கணிக்கும் இடமாக மாறி உள்ளது பரந்துார் பகுதி.
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிகளுக்குள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் தான் சென்னைக்கான புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை அரசு தரப்பில் துவங்கி உள்ளனர்.
இந்தப் பகுதியில் விமான நிலையத்துக்காக, விளை நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று சொல்லி, பரந்துாரைச் சுற்றிலும் இருக்கும் 20 கிராமங்களில் இருக்கும் 16,000 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, பரந்துார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், பரந்துார் சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இக்கிராமங்களில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, 16,000த்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
அவர்களில் 12,000 பேருக்கு ஓட்டு உள்ளது. விமான நிலைய திட்டத்தால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதால், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, 600 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் உள்ளனர். விமான நிலையம் அமைக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் போராட்டம் நடக்கிறது.
துவக்கத்தில் பெரிய கட்சி சார்பில் சிலர் இங்கு வந்து மக்களோடு பேச்சு நடத்தினர். தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறுமாறு கோரினர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், அவர்கள் வேட்பாளர்களிடம் நிலைமை சொல்லி, 'அலர்ட்' செய்து விட்டனர்.
இதனால், அத்துடன், விமான நிலையம் அமைய உள்ள மகாதேவிமங்கலம், அக்கமாபுரம், ஏகனாபுரம், சிங்கிலிபாடி, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வராமல் தவிர்த்துள்ளனர்.
பரந்துார் விமான நிலையம் அமையவிருக்கும் பகுதிகள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிகளுக்குள் அடங்குவதால், இரு தொகுதிகளில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரவில்லை.
தேர்தலை புறக்கணிப்போர் எண்ணிக்கை அதிகம் என்பதால், அரசு அதிகாரிகள் பரந்தூர் பகுதிக்கு வந்து மக்களிடம் பேச்சு நடத்துகின்றனர். ஓட்டுப் போடச் சொல்லி வலியுறுத்தும் அவர்கள், எந்த தீர்வையும் சொல்லவில்லை. அதனால், கண்டிப்பாக தேர்தல் புறக்கணிப்பு நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய சென்னை
இதே போல, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சூளை தட்டான்குளம் பகுதியில், அங்காளம்மன் கோவில் இடம் மீட்பு தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தட்டான்குளம் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அவரவர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.
இப்பகுதி மக்களும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் இருக்கும் சூளை பகுதியில் பிரசாரத்திற்கு சென்றால், மக்கள் பிரச்னை செய்வர் என்று நினைத்து, தி.மு.க., வேட்பாளர் தயாநிதி அப்பகுதி பக்கம் செல்வதை தவிர்த்து வருகிறார்.
தென் சென்னை
அடுத்ததாக தென் சென்னையின் பெரும்பாக்கம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்டிருக்கும் 32,000 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுப்போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையறிந்து கொண்ட வேட்பாளர்கள் பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை. ஓட்டு இல்லாதவர்களிடம் ஏன் ஓட்டு கேட்டு பிரசாரத்துக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லாமல் தவிர்த்து விட்டனர்.
வாசகர் கருத்து