சூரிய கட்சி வளையத்திற்குள் பா.ஜ., :களத்தில் தவிக்கும் கூட்டணி வேட்பாளர்கள்
சிவகங்கை தொகுதியில் பா.ஜ., நிர்வாகிகளின் தேர்தல் பணி மந்தகதியில் இருப்பதாக கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக தொகுதி முழுதும் பா.ஜ., ஓராண்டாகவே தயாராகி வந்தது. அனைத்து 'பூத்'களிலும் கமிட்டி அமைப்பதை முதற்கட்ட பணியாக செய்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையின்படி, மக்கள் சார்ந்த பிரச்னையில் அக்கட்சியினர் தலையிட்டு குரல் கொடுத்து வந்தனர்.
என்றாலும் சில இடங்களில் நிர்வாகிகள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தருவது போல் போல் மென்மையான போக்கை கடைபிடித்து வந்தனர். அந்த குறிப்பிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சி சொல்லும் அளவிற்கு இல்லாமல் இருந்தது. தொடர்ந்து தேர்தல் வேலைகள் துவங்கிய போதும், சில பகுதி பா.ஜ.,நிர்வாகிகள் மந்தமாகவே இருந்தனர்.
தி.மு.க.,வினரின் கவனிப்பு வளையத்திற்குள் பல நிர்வாகிகள் சிக்கிக் கொண்டதாக தொண்டர்கள் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பினர். தேர்தல் நேரம் என்பதால் தலைமை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தேவநாதன் யாதவ், சிவகங்கை தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட போதும், பா.ஜ., சார்பில் பெரிய அளவில் தேர்தல் பணிகள் இல்லை. மற்ற கட்சியினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், பா.ஜ., தரப்பில் சுணக்கம் இருக்கிறது.
சூரிய கட்சி வளையத்திற்குள் சிக்கி வெளியேற முடியாமல் இருப்போரை கண்டறிந்து, பா.ஜ.,வில் களை எடுத்தால் மட்டுமே குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கான ஓட்டுகளை தேவநாதன் யாதவால் பெற முடியும் என்ற நிலை சிவங்கையில் நிலவுகிறது.
தென்காசியிலும் இதே நிலை...
தென்காசி தொகுதியில் உங்களுக்குத்தான் கொடுக்கப்படும் என கட்சித் தலைமை வழங்கிய உத்தரவாதத்தை அடுத்து, கடந்த ஓராண்டாக தொகுதி முழுக்க பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வந்தார் பா.ஜ., 'ஸ்டார்ட் அப்' அணி மாநில நிர்வாகியும், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான அனந்தன் ஐயாசாமி.
ஆனால், பா.ஜ., கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் இணைந்ததும், தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், லோக்கல் பா.ஜ.,வினரும், அனந்தன் ஐயாசாமி ஆதரவாளர்களும் பா.ஜ., தலைமை மீது அதிருப்தி அடைந்தனர்.
தனக்கு 'சீட்' கிடைக்காத விரக்தியில் இருந்த அனந்தன் ஐயாசாமி, இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பலமுறை வலியுறுத்திக் கேட்டு, அவருக்கு சீட் மறுக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்களை சொல்லி, அவரை சமாதானப்படுத்தவில்லை.
கட்சித் தலைமை மீது கடும் கோபம் அடைந்த அனந்தன் ஐயாசாமி, அரசியல் பணிகள் போதும் என்று முடிவெடுத்து, அப்படியே ஒதுங்கியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் வேலையில் ஈடுபாடு காட்டாமல், தன் சொந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
இதற்கிடையில், அனந்தன் ஐயாசாமி ஆதரவாளர்களும், தென்காசி பா.ஜ.,வில் ஒரு பகுதியினரும் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதை தெரிந்து கொண்ட தி.மு.க., தரப்பு, அவர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருப்பதாக சொல்கின்றனர்.
இதனால் ஜான்பாண்டியனும் தேர்தல் களத்தில் கடும் பின்னடைவை சந்தித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து