யுகாதிக்கு லீவ் எடுத்த காங்., - பா.ஜ., வேட்பாளர்கள்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் கோபிநாத். இவர், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி களம் காண்கிறார். ஆனால், களத்திற்கு வருவதில்லை. தி.மு.க.,வினரும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, வேட்பாளர் இல்லாததால், நிகழ்ச்சிகளை அவ்வப்போது ரத்து செய்து வருகின்றனர். கோபிநாத், நேற்று முன்தினம் ஓரிரு இடங்களில் பிரசாரத்துக்கு சென்று திரும்பினார். நேற்று யுகாதி பண்டிகை என்பதால் 'இன்று நான் லீவ்' எனக் கூறி பிரசாரத்தை தவிர்த்துள்ளார்.
இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஓட்டு வங்கி குறையும் இடத்தில் ஓரிரு முறையாவது பிரசாரம் செய்தால்தான் மக்கள் நமக்கு ஓட்டளிப்பர். இது தெரியாமல் பிரசாரத்திற்கு வராமல் காங்., வேட்பாளர் அலைக்கழிக்கிறாரே' என, தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
அதேபோல, பா.ஜ.,வேட்பாளர் நரசிம்மனும் நேற்று பிரசாரம் மேற்கொள்ளவில்லை. நேற்று காட்டிநாயனப்பள்ளி, கம்மம்பள்ளி, வேட்டியம்பட்டி பகுதியில் பிரசாரத்திற்கு செல்வதாக இருந்தது. அங்கு பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நபர்கள், பா.ஜ.,வில் சேரும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவரும், 'யுகாதி லீவ்' எடுத்து விட்டதாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ., கூட்டணி கட்சியினர் கூறுகையில், 'மாவட்டத்தில் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் நிலை உள்ளது. அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், நமக்கு பின்னடைவு ஏற்படும் என்பதையும், நாட்கள் குறைவாக உள்ளது என்பதையும் வேட்பாளர் உணர வேண்டும். நாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு, எங்கள் கையில் இருந்து காசு செலவு செய்கிறோம். ஆனால், வேட்பாளர் நேற்று லீவ் எடுத்து விட்டார்' என வேதனையுடன் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து