பிரதமர், முதல்வர் வரவில்லை கிருஷ்ணகிரியின் பரிதாப நிலை
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், காங்., - அ.தி.மு.க., - பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கடும் போட்டி நிலவும் இத்தொகுதியில் பிரசார களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடை அனல் காற்று மட்டுமே வீசுகிறது. மூன்று கட்சி வேட்பாளர்களும் எந்தப் பகுதியில் பிரசாரம் செய்கின்றனர் என்பது கூட்டணி கட்சியினருக்கு கூட தெரிவதில்லை.
அதேபோல ஒவ்வொரு கட்சியினரும், தங்கள் தொகுதியில் நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி ஓட்டு வேட்டையாடுவர். அதுவும் இத்தொகுதி யில் இதுவரை நடக்கவில்லை.
உச்சகட்ட அவலமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி தொகுதி பக்கமே வரவில்லை. பிரதமர் மோடி, கிருஷ்ணகிரி பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேச, அக்கட்சியினர் இடங்களை தேர்வு செய்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பிரசார பட்டியலிலும் கிருஷ்ணகிரி இடம் பெறவில்லை. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பூவின் கிருஷ்ணகிரி பிரசாரமும் ரத்தாகியுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்ற தொகுதிகளில் பிரசாரத்திற்காக வலம் வரும் நிலையில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு வரவில்லை. அதனால், நடிகர், நடிகைகளுடன் வலம் வரலாம் என காத்திருந்த அரசியல் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளதோடு, பெரும் சோகத்துக்கும் ஆளாகி உள்ளனர்.
வாசகர் கருத்து