நோட்டாவுக்கு போடாதீங்க : சீமான் அட்வைஸ்
"பா.ஜ.,வின் எச்.ராஜாவை எம்.எல்.ஏ., ஆக்கி அழகு பார்த்தது தி.மு.க., இவர்கள் பா.ஜ.,வை எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் எப்படி நம்புவார்கள்?" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து சீமான் பேசியதாவது:
ஆட்சியில் இருப்பவர்கள் நம் இனத்தைப் பாதுகாப்பார்கள் என நம்பினோம். கட்சிகளுக்கு நம்மை ஆள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பவன், எதையும் இழக்க தயாராக இருப்பான். மக்களைப் பற்றி நினைக்காதவர்கள் தான் நாட்டில் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கின்றனர்.
இந்த தேர்தலில் யாரும் புதியவர்கள் கிடையாது. இவர்கள் பலமுறை ஆட்சி செய்தவர்கள். புதிதாக யாரும் அதிகாரத்துக்கு வரப் போவதில்லை. இவர்களால் மக்கள் அடைந்த பயன் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இந்த மாநிலத்தை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகள், மாதம் 1000 ரூபாய் தந்ததை சாதனை எனச் சொல்கின்றனர். நம் வீட்டு பெண்களை கையேந்த வைத்தது எவ்வளவு கொடுமை என்பதை சிந்திக்க வேண்டும்.
தேர்தலைப் புறக்கணிப்போம் என சில கிராம மக்கள் சொல்கின்றனர். அது தவறு. நோட்டாவுக்கு செலுத்தாமல் சரியான ஜனநாயக ஆற்றல் உள்ள கட்சி என்பதை தேர்வு செய்ய வேண்டும். நோட்டாவுக்கு வாக்களித்தால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
அனைத்துக் கட்சிகளும் எங்களை விமர்சிக்கின்றன. நாங்கள் என்ன 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஊழல் செய்தோமா. நாட்டின் வளங்களை சுரண்டினோமா. இதை செய்ய நினைப்பவர்களைத் தடுக்க போராடுகிறோம். இதனால் எங்களை அழிக்க நினைக்கின்றனர்.
கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை இல்லாமல் ஏன் மூடி மறைக்கப்படுகிறது, இதை ஒரு வாக்குறுதியாக ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை சுடுமாறு உத்தரவு தந்தது யார். திட்டமிட்டு 15 பேரை கொன்றுவிட்டு, 'நானே டி.வி.,யை பார்த்து தெரிந்துகொண்டேன்' என்றார் பழனிசாமி.
நச்சு ஆலைகளைக் கொண்டு வர அனுமதித்தது திராவிட கட்சிகள். கேரளாவில் அணுஉலைகளை நிறுவ அங்குள்ள காங்கிரசும் - கம்யூ., கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இதை நிறுவ வேண்டும் என அதே காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சொல்கின்றன.
100 நாள் வேலைத்திட்டம் என்பது வெறும் வெட்டித் திட்டம். அதனை வேலை என்று வேறு சொல்கின்றனர். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இந்தி பேசும் மாநிலமாக தமிழகம் மாறும்.
பா.ஜ.,வின் எச்.ராஜாவை எம்.எல்.ஏ.,வாக அழகு பார்த்தது தி.மு.க., இவர்கள் பா.ஜ.,வை எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் எப்படி நம்புவார்கள்?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து