அரை சதவீத ஓட்டுக்கே 500 கோடி கொடுக்கிறார்கள் : சீமான் பேச்சு

"ஆயிரம் ரூபாயைக் கொடுப்பது சாதனையல்ல. அதைக் கொடுக்காமல் அவர்களின் வறுமையை பெருக்குவது தான் சாதனை. மக்களை இலவசம் பெறாமல் வாழ வைப்பது தான் சாதனை" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து சீமான் பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியை கேட்கின்றனர். இந்த தொகுதியின் சார்பில் எந்த பிரதிநிதி டில்லிக்கு சென்றால் இந்த மண்ணுக்காக போராடுவார் என நினைக்க வேண்டும். மோடி ஆண்டதால் தான் இந்த மண் நாசமாகிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும்.

10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தார். அடுத்த 10 ஆண்டுகள் மோடி ஆட்சி செய்தார். இந்த 20 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்தார்கள். அதே வறுமை, அதே பசி, அதே வேலையின்மை தான். வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் நாம் இல்லை.

பணம் செல்லாது என அறிவித்தனர். ஜி.எஸ்.டி வந்த பிறகு இந்திய பொருளாதாரம் சீரழிந்துவிட்டது என உலக வங்கி சொன்னது. இவர்களிடம் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. எதைப் பற்றியும் பேசாத இவர்கள், மாடல் அழகி போட்டியை நடத்துவது போல ரோடு ஷோ நடத்துகிறார்கள்.

இன்று வரையில் டில்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். எங்களின் விளைபொருளுக்கு நியாயமான விலையை தீர்மானம் செய்யுங்கள் என்கிறார்கள். கடந்த தேர்தலில், 'நான் வந்து விலையை உறுதி செய்வேன்' என்றார் மோடி. ஆனால், போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்.

நாங்கள் வந்து தான் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு பதவி தான் வேண்டும் என்றால் வேறு ஒரு கட்சியில் சேர்ந்து எம்.பி, எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியிகிருக்கலாம். அரை சதவீத ஓட்டு உள்ளவருக்கு 500 கோடி கொடுக்கிறார்கள் என்றால் 7 சதவீத ஓட்டு உள்ளவனுக்கு எவ்வளவு கோடிகளைக் கொடுக்க முன்வந்திருப்பார்கள் எனப் பாருங்கள்.

எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்காக நேர்மையாக நிற்போம். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் எனக் கூறிவிட்டு சுருக்குப் பையில் இருப்பதையும் பறித்துவிட்டார்கள்.

'2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்பேன்' என மோடி சொன்னார். அப்படியானால், மன்மோகன் சிங்கும் 2 கோடிப் பேருக்கு வேலை கொடுக்காமல் இருந்துள்ளார் என்று தான் பொருள்.

இந்தியாவை யாரும் ஆளலாம். அது தான் மக்களுக்கான அதிகாரம். மக்கள் பிரச்னைகளுக்காக யார் முதலில் வந்து நிற்கிறாரோ அவர் தான் நாட்டின் பிரதமர். மக்களுக்குப் பிரச்னைகளைத் தருகிறவர் பிரதமர் அல்ல.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டார்கள் எனத் தெரிந்தே கர்நாடகாவில் ஓட்டு கேட்டு ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவரது உருவப்படத்தை கர்நாடகாவில் எரித்தபோது தி.மு.க.,வினர் பேசவில்லை. நான் தான் எதிர்த்துக் கேட்டேன்.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர், கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு ஆகியவை அவர்களுக்கு மட்டும் தான் என்றால் தேசப்பற்று எப்படி வரும். இந்தக் கட்சிகள் இந்திய ஒற்றுமையை எப்படிப் பேசும். மாநில உரிமைகளை இழந்துவிட்டு, 'இந்தியாவை காப்பாற்றுவேன் வாருங்கள்' என்கிறார்.

குஜராத்தை சேர்ந்த ஒருவர் 2 முறை பிரதமராக இருந்துவிட்டார். மற்ற மாநிலங்களில் தகுதிவாய்ந்த பிரதமர்கள் இல்லையா. ஒரு மாநிலத்துக்கு 5 ஆண்டுகள் என பிரதமர் பதவியை பிரித்துக் கொடுக்க வேண்டும்.

சீக்கியரான மன்மோகனுக்கு இணையான திறமையுள்ள ப.சிதம்பரத்துக்கு 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை ஒதுக்கியிருக்கலாம். ஒரு தமிழன் ஆண்டான் என்ற மதிப்பும் பெருமையும் கிடைத்திருக்கும்.

மத்திய அரசுக்கு வருமானம் எங்கே இருந்து வருகிறது. அவர்கள் என்ன ஊதுபத்தி, சாம்பிராணி விற்கிறார்களா. இந்தியாவுக்கு அதிக வருவாய் கொடுப்பதில் முதலிடத்தில் மகாராஷ்ட்ரா உள்ளது. 2வது இடத்தில் தமிழகமும் 3வது இடத்தில் கர்நாடகாவும் உள்ளது. நமக்கு 1 ரூபாயில் 28 பைசாவை கொடுக்கிறார்கள். அப்படியானால் எதற்கு பா.ஜ., எதற்கு காங்கிரஸ்?

இங்கே பாருங்கள்... காவலர்கள் எல்லா நேரத்திலும் வெயிலில் நிற்கிறார்கள். நீதிபதிகளுக்கு கூட கோடை விடுமுறை இருக்கிறது. காவலர்களுக்கு விடுமுறை இருக்கிறதா. காவல்துறையினர் ஒவ்வொருவரும் புரட்சியாளர்கள் தான். நாம் ஓட்டலில் சாப்பிட்டு 5 ரூபாய் கொடுப்பதை டிப்ஸ் என்கிறோம். அதையே காவலர்களுக்கு கொடுத்தால் லஞ்சம் என்கிறோம்.

காவலர்களுக்கு பழச்சாறு, தண்ணீர் கொடுங்கள். நாம் தமிழர் ஆட்சி மலரும் போது காவல்துறையை கையெடுத்துக் கும்பிடக் கூடிய சூழலை உருவாக்குவோம். அது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக இருக்காது.

500 கோடி ரூபாய் இருந்தால் சி.சி.டி.வி கேமராக்களை வைத்துவிடலாம். அப்போது சாலையை இரண்டு கண்கள் கவனிக்கும். இதெல்லாம் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் என நினைக்க வேண்டாம். எங்கள் ஆட்சியில் யாரும் தப்பிக்க முடியாது. இது தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்.

அடிப்படை அமைப்பை மாற்ற வேண்டும் என்றால் சிரிக்கிறார்கள். ஒருவர் 2 பதவிக்கு போட்டி போடக் கூடாது. 2 தொகுதிகளில் போட்டி போடக் கூடாது. எம்.எல்.ஏ., ஆக இருப்பவர் எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார்.

தேர்தலுக்காக 1 லட்சம் கோடிக்கு குறைவில்லாமல் நாடு செலவழிக்கிறது. தற்சார்பு பொருளாதாரம் வரும் போது தான் ஏழ்மை, வறுமை ஒழியும். இதை நான் சொன்னால் அவர்களே சிந்தித்தது போல பேசுவார்கள். ஆடு மாடுகளை வளர்க்க வேண்டும் என்று மோடியே பேசுகிறார்.

ஆயிரம் ரூபாயைக் கொடுப்பது சாதனையல்ல. அதைக் கொடுக்காமல் அவர்களின் வறுமையை பெருக்குவது தான் சாதனை. மக்களை இலவசம் பெறாமல் வாழ வைப்பது தான் சாதனை.

இவ்வாறு சீமான் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்