உறுதியாக மாற்றம் வரும் என நம்புகிறேன்: சீமான்
"லோக்சபா தேர்தலில் உறுதியாக மாற்றம் வரும் என நம்புகிறேன்" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல்கட்ட ஓட்டுப் பதிவு துவங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் 6.23 கோடிப் பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணியளவில் ஓட்டுப் பதிவு துவங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
சென்னையில் பல இடங்களில் ஓட்டுப் பதிவு மந்தமாக நடந்து வருகிறது. குறிப்பாக, சைதாப்பேட்டையில் முதல் 2 மணிநேரத்தில் 1.99 சதவீத ஓட்டுகளே பதிவானது.
அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் ஓட்டு செலுத்த காலை முதலே வரத் துவங்கிவிட்டனர். சேலம் சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் சென்று முன்னாள் முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்.
அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார். அப்போது அவர் பேசுகையில், "மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டுச் செல்கின்றனர். இந்த ஆர்வத்தைப் பார்க்கும் போது உறதியாக ஒரு மாற்றம் வரும் என நம்புகிறேன்.
ஜனநாயக கடைமையின் படி அனைவரும் வந்து ஓட்டு போட வேண்டும். நாம் ஓட்டு போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். நாம் வாழும் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய ஜனநாயக கடமை ஓட்டு போடுவது தான்" என்றார்.
சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் ஓட்டு செலுத்திய அமைச்சர் உதயநிதி, "மாநிலம் முழுவதும் எங்கள் கூட்டணிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை பிரசாரத்தில் பார்க்க முடிந்தது. மற்றவற்றை ஜூன் 4ல் பேசுவோம்" என்றார்.
ஆரணி தொகுதிக்குட்பட்ட அவ்வையார் குப்பத்தில் வாக்களித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "இது மாற்றத்துக்கான தேர்தல். மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களுக்காகப் பாடுபடுகின்றவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
வாசகர் கருத்து