பா.ஜ.,வுடன் தி.மு.க, அ.தி.மு.க., புரிந்துணர்வு ஒப்பந்தம்: சீமான்
"பா.ஜ.,வையும் மோடியையும் எதிர்க்கிறோம் என சொல்லும் தி.மு.க., கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க எந்த வேலையும் செய்யவில்லை" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் வேட்பாளர் சந்தோஷ்குமாரை ஆதரித்து சீமான் பேசியதாவது:
ஈழத்தில் மக்களை கொலை செய்தது காங்கிரஸ் ஆட்சி. அதற்கு துனை நின்றது தி.மு.க., அப்போது பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் வேடிக்கை பார்த்தது. அனைத்து நிறுவனங்களையும் அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பணம் வாங்கியது மோடி.
இதை எல்லாம் தொடர்ந்து எதிர்த்ததால் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்துவிட்டனர். அதே கருத்தை நான் சொல்கிறேன். முடிந்தால் என்னை தொட்டுப் பாருங்கள்.
எங்கெல்லாம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதோ அங்கெல்லாம் பெரும் பணம் கைமாறியுள்ளது. பா.ஜ.,வையும் மோடியையும் எதிர்க்கிறோம் எனச் சொல்லும் தி.மு.க., கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க எந்த வேலையும் செய்யவில்லை.
அ.தி.மு.க.,வும் வேலுமணியும் அந்த தொகுதியில் வேலை பார்க்கவே இல்லை. திருப்பூரில் பொதுக்கூட்டம் கூட்டிய ஸ்டாலின் ஏன் கோவையில் கூட்டவில்லை. எதிர்ப்பது போல நாடகம் நடத்துகின்றனர். இவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம்.
கேலோ இந்தியா போட்டிக்கு ஏன் மோடி வர வேண்டும். ஸ்டாலின் மாலையில் மோடியை சந்திப்பார், உதயநிதி காலையில் மோடியை சந்திப்பார். எந்த மாநிலத்திலாவது பிரதமர் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளாரா, உதயநிதியை மட்டும் ஏன் சந்திக்க வேண்டும்?
தி.மு.க.,வில் ஆ.ராசாவை தவிர வேறு யாரும் பா.ஜ.,வை எதிர்த்து பேசவில்லை. பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி என யாரும் பேசவில்லை. இனி பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என ஜெயலலிதா சொன்னார். அவர் மறைந்த பின் சசிகலா தலையில் மோடி கை வைத்தார், முடிந்துவிட்டது.
எத்தனையோ மேதைகள் வந்தனர். தத்துவங்களை கொடுத்தனர். அனைத்தும் படித்துவிட்டு உதயசூரியன், கை சின்னம், தாமரைக்கு என ஓட்டு போடுகின்றனர். இதற்கு விஷம் குடித்துவிட்டு செத்துப் போய்விடலாம். மற்ற அரசியல் கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். நாங்கள் எங்கள் இனத்தை நம்பியே நிற்கிறோம்.
எங்களிடம் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்க பேச்சு நடத்தின. ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி தருகிறோம் என எங்களிடம் பேசியிருக்க மாட்டார்களா. நாங்கள் போகவில்லையே ஏன். எங்களுக்கு இந்த மக்கள் தான் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து