இந்த நாடு அதானி, அம்பானிகளின் வீடு: சொல்கிறார் சீமான்
"ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டேன் என ஒவ்வொருவரும் முடிவு எடுத்தால் மாற்றம் விரைவில் உண்டாகும். என்னிடம் பணம் இல்லை. இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன். மக்களுக்கு சேவை செய்ய எதற்கு பணம்?" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து சீமான் பேசியதாவது:
சிலர் பணத்தை நம்பியும் பதவிக்காகவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இங்குள்ள அரசியல் கட்டமைப்பை மாற்றி புரட்சியை படைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டேன் என ஒவ்வொருவரும் முடிவு எடுத்தால் மாற்றம் விரைவில் உண்டாகும். என்னிடம் பணம் இல்லை. இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன். மக்களுக்கு சேவை செய்ய எதற்கு பணம்?
மக்கள் வரி கட்டுகிறார்கள். சாலை வரி கட்டிய பிறகும், சுங்க கட்டணம் ஏன் வசூலிக்கிறார்கள், சாலைகளைக் கூறுபோட்டு விற்றுவிட்டனர். இது நாடு இல்லை... அதானி, அம்பானிகளின் வீடு.
நீங்கள் வரிசையில் நின்று வாக்களிப்பது எல்லாம் அவர்கள் வாழ்வதற்கு மட்டுமே. நாம் வாக்களிக்கிறோம் வரியும் கட்டுகிறோம் இப்படி இருந்தால் எப்படி வாழ முடியும்?
அனைத்திற்கும் வரி போட்டால் எப்படி வாழ முடியும். ஊழல், தீவிரவாதம் ஒழியும் என்பதற்காக பணம் செல்லாது என பிரதமர் அறிவித்தார். ஆனால் ஊழல் ஒழிந்தபாடில்லை.
பணமில்லா பரிவரத்தனை என்கிறார்கள். ஓட்டுக்கு பணம் மட்டும் எப்படி தருகிறார்கள். நாட்டை காங்கிரசும்-பா.ஜ.,வும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனாலும், நாட்டில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டுமா?.
அமெரிக்காவில் உள்ள தனியார் முதலாளி தான் நீட் தேர்வை நடத்துகிறார். என் நாட்டு மாணவர்களுக்கான தகுதியை அமெரிக்க முதலாளி தான் தீர்மானிப்பாரா. 2019ல் தி.மு.க.,எம்.பி.,க்கள் 39 பேர் பார்லிமென்ட்டுக்கு போனார்கள். அவர்கள் அங்கு என்ன செய்தார்கள்?
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பல ஆண்டுகளாக ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறார்கள், தேர்தல் நேரத்தில் என்னுடைய விவசாயி சின்னத்தை எடுத்துக் கொண்டனர். இவர்களுக்கு என் மீதுள்ள பயம் தான் காரணம்.
கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றால் நாட்டில் நல்ல ஜனநாயகம் எப்படி மலரும்?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து