சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க., செய்தது என்ன: சீமான் கேள்வி
"தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்தை வைத்துள்ளனர், இவர்கள் ஆட்சியில் இம்மக்களுக்கு செய்த நன்மை ஒன்றாவது உள்ளதா?" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலுார் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சீமான் பேசியதாவது:
வழக்கமான தேர்தலாக இதைப் பார்க்காமல், அரசியல் போர்க்களமாக நாம் தமிழர் கட்சி பார்க்கிறது. இங்குள்ள இதர கட்சிகள் பணம், கட்டமைப்பு, அதிகாரங்கள் என அனைத்தையும் வைத்துள்ளன.
பல ஆண்டுகளாக சில கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன, எங்களுக்கு மட்டும் தேர்தல் நேரத்தில் சின்னத்தை பறித்துக் கொண்டு வேறு சின்னத்தை தருகின்றனர். இதை ஜனநாயகம், சமத்துவம், சம உரிமை என்கிறார்கள்.
தி.மு.க.,- அ.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு பணம் தராமல் ஒரு ஓட்டாவது பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா. இவர்கள் அனைவரும் ஆட்சியில் இருந்துள்ளனர். மக்களுக்கு ஏதாவது நன்மை செய்திருந்தால் பணம் தந்து ஓட்டு பெற வேண்டிய நிலை இருக்காது.
மது விற்பனை செய்யும் பணத்தில் தமிழக அரசு நடக்கிறது, தி.மு.க.,வோ போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் செயல்படுகிறது. இதைத் தவிர தி.மு.க.,வுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் ரோடு ஷோ நடத்துகின்றனர். இவர்களை மறுபடியும் ஆட்சியில் அமர்த்துவதே அவசியமற்றது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்தை வைத்துள்ளனர், இவர்கள் ஆட்சியில் இம்மக்களுக்கு செய்த நன்மை ஒன்றாவது உள்ளதா?
மீளமுடியாத வரிச்சுமையை மக்கள் மீது திணித்துள்ளனர். நீட் தேர்வு, சி.ஏ.ஏ சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்கள் கொண்டு வந்ததை மோடி வளர்க்கிறார். இவர்களுக்குள் என்ன வேறுபாடு?
நாட்டின் ராணுவத்தை தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்த்து தந்த கட்சிகள் தான் காங்கிரசும் பா.ஜ.,வும். ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் கச்சத்தீவில் தமிழர்களின் உரிமைமைய கருணாநிதி விட்டுக் கொடுத்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து