ஸ்டாலின் தனிக்கட்சி தொடங்கியிருந்தால்... : கலாய்த்த சீமான்
"தமிழகத்தில் 1, 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என பெருமை கொள்ளும் கட்சிகளின் தொண்டர்கள், ஆளுக்கு ஒரு மரம் வைத்திருந்தால்கூட பசுமையாக மாறி இருக்கும்" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சீமான் பேசியதாவது:
நாட்டின் வளத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற நோக்கிலேயே நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் எண்ணற்ற வளங்கள் இருந்தும் ஏழ்மையில் சிக்கித் தவித்து வருகிறோம்.
விவசாயத்தை விட்டு வெளியேரும் துயரம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டிஎன்ற திட்டம் இருக்கிறது, ஸ்மார்ட் கிராமம் என்ற திட்டம் இங்கு கிடையாது. ஸ்மார்ட் சிட்டியில் நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி மட்டும் கவலைப்படுவார்கள். கிராமங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.
கிராமங்களில் இருந்து தான் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. டாஸ்மாக்கில் மது விற்பது அரசின் வேலையாக இருக்கும் போது, மக்களுக்கு உணவு தரும் வேலை அரசு வேலையாக இருக்கக் கூடாதா?
பாலில் மிகப் பெரிய பொருளாதாரம் இருக்கிறது என பிரதமர் மோடி சொல்கிறார், ஆனால் நாம் மாடுகளை வளர்க்க அவமானப்படுகிறோம். 1, 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என பெருமை கொள்ளும் கட்சிகளின் தொண்டர்கள் ஆளுக்கு ஒரு மரம் வைத்திருந்தால் கூட பசுமையாக மாறி இருக்கும்.
அனைத்தையும் தேடித் தேடி தேர்வு செய்யும் மக்கள், தலைவர்களை தேர்வு செய்வதில் மட்டும் தடுமாறுவது ஏன். தி.மு.க., பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு நன்மையாவது நடந்திருக்கிறதா. 39 எம்.பி.,க்களை வைத்திருக்கும் தி.மு.க., மக்கள் பிரச்னைகளுக்கு கொடுத்த தீர்வு என்று எதுவும் இல்லை.
ஓட்டுக்கு பணம் தரும் இடத்தில் தான் ஊழல் விதை விதைக்கப்படுகிறது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க., என்பது ஸ்டாலின் கட்சி இல்லை, அவர் தனியாக கட்சி துவங்கி இருந்தால் 4 ஓட்டு கூட வாங்க வாய்ப்பு இல்லை, அவர் வீட்டில் இருப்பவர்கள் கூட வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து