ஓட்டுக்கு தந்த பணம் தான், உரிமைத் தொகை: சீமான் பேச்சு
''நாட்டுக்கு சேவை செய்ய வருபவர்கள் ஓட்டுக்கு எதுக்கு நோட்டை தர வேண்டும். சிறந்த லாபம் ஈட்டும் தொழிலாக அரசியலை மாற்றிவிட்டனர்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் நீலகிரி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து சீமான் பேசியதாவது:
ஊழல் லஞ்சத்தை ஒழிப்பேன் என சிலர் சொல்கிறார்கள். யாரோடு சேர்ந்து ஒழிப்போம் என்பதை சொல்ல முடியுமா. இங்கு நல்லாட்சி என்பது வெறும் சொல்லாட்சியாக தான் இருக்கிறது. இங்கு கொள்கை கேட்பாடு என்பதெல்லாம் யாருக்கும் கிடையாது,
நாட்டுக்கு சேவை செய்ய வருபவர்கள் ஓட்டுக்கு எதுக்கு நோட்டை தர வேண்டும். சிறந்த லாபம் ஈட்டும் தொழிலாக அரசியலை மாற்றிவிட்டனர். அரசியல் வேண்டாம் என விலகி நிற்பது வானம் இல்லாத பூமியில் நான் வாழப்போகிறேன் என்பதைப் போன்றது.
பலமுறை காங்கிரஸ் -பா.ஜ.,வும் நாட்டை ஆண்டுள்ளன. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பலமுறை இந்த மாநிலத்தை ஆட்சி செய்துள்ளனர். தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாதவர்கள் தான் ஓட்டுக்கு பணம் தருவார்கள்.
தி.மு.க., மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை தருவதை பேசிக் கொண்டிருக்கின்றனர். அது உரிமைத் தொகை கிடையாது. ஓட்டுக்கு தந்த பணம் அது. தொழில் வளர்ச்சியில் முழுக் கவனம் செலுத்திவிட்டு, விவசாயியத்தை கைவிட்ட பல நாடுகள் இன்று பிச்சை எடுக்கின்றன.
நாட்டில் உள்ள கனிமவளங்களை சுரண்டி இயற்கையை நாசம் செய்துவிட்டனர். நம் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தற்கு காரணம் பணம் செல்லாது என அறிவித்ததும், ஜி.எஸ்.டி.,யை போட்டதும் தான் காரணம் என உலக வங்கி சொல்கிறது. இதற்கு பா.ஜ.,வால் பதில் சொல்ல முடியவில்லை.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகளைச் சொல்லி மோடியால் வாக்கு கேட்க முடியுமா. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்களுடன் கூட்டு சேர்ந்தது தி.மு.க.,
தேர்தல் வரும் போது மட்டும் 'கச்சத்தீவை மீட்போம், சிலிண்டர் விலையை குறைப்போம், ஆசிரியர் பிரச்னையை தீர்ப்போம்' என்கின்றனர். இவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து