சில சின்னங்களுக்கு மட்டுமே வாக்களிப்பது துரோகம்: சீமான்
"சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவன் நாட்டு மக்களுக்கு முதலாளிகளுக்கும் இடையே தரகு வேலையைத் தான் செய்ய முடியும். தலைவனாக இருந்து சேவை செய்ய முடியாது" என. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கொளத்துாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
இதுவரையில் ஆண்ட ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டிய கடைசி தேர்தல் இது. நாட்டை 50 வருடங்களுகு்கு மேல் காங்கிரசும் 15 வருடம் பா.ஜ.,வும் ஆட்சி செய்துள்ளது. மக்களின் வாழ்கைத்தரம், தொழில் வளர்ச்சி எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தேர்தல் வந்துவிட்டாலே மக்கள் தொடர்ச்சியாக சில சின்னங்களுக்கு மட்டுமே வாக்களித்து வருகின்றனர். சில கட்சிகள் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டு அவர்களுக்கே மீண்டும் வாக்களித்து வருகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்.
தொழில் செய்வது அரசின் வேலை இல்லை என்று கூறி அதை தனியார் முதலாளிகளுக்கு கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கின்றனர்.
சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவன் நாட்டு மக்களுக்கு முதலாளிகளுக்கும் இடையே தரகு வேலையைத் தான் செய்ய முடியும். தலைவனாக இருந்து சேவை செய்ய முடியாது.
எந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் அரசுப் பள்ளி, கல்லுாரிகளில் பயில்வது கிடையாது, தனியார் முதலாளிகள் தான் கல்வியை தரமாக தருவார்கள் என்றால் அரசுப் பள்ளி, கல்லுாரிகளின் தரத்தை ஏன் உயர்த்தவில்லை. இவர்கள் உயர்த்தமாட்டார்கள்.
தனியார் பள்ளிகள், கல்லுாரிகளை வைத்திருப்பவர்களே அரசை நடத்துபவர்கள் தான். அரசுப் பள்ளி, கல்லுாரிகளின் தரத்தை உயர்த்தி தந்தால் தனியார் கல்லுாரிகள் பாதிக்கப்படும்.
உடல்நிலை சரியில்லை என்றாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அரசியல்வாதிகள் செல்வார்கள். எதுவாக இருந்தாலும் அரசை விட தனியார் முதலாளி தான் சிறப்பாக செய்வார்கள் என நம்மை கட்டமைக்கின்றனர்.
மத்திய அரசு தாங்கமுடியாத ஜி.எஸ்.டி.,யை சுமத்தியதால் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்ந்துவிட்டது. மாநில அரசு சொத்து வரி என்ற பெயரில் மக்கள் மீது வரியை சுமத்துகின்றனர். இதைத் தவிர நாட்டின் வருவாயை அதிகரிக்க எந்த திட்டங்களும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து