அண்ணாமலையை தோற்கடிக்க கோவையில் முகாமிட்ட சபரீசன்
கோவையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில், பல யுக்திகளை கையாண்டு, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க.,
இந்தப் பணிகளை லோக்கலில் இருந்து மேற்பார்வையிட்டு, அனைத்து தேர்தல் வேலைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
இந்நிலையில், கோவைக்கு திடுமென நேற்று வந்தார் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கோவையின் தேர்தல் களம் முழுமையாக பா.ஜ., பக்கம் மாறி இருப்பதாக கட்சித் தலைமைக்கு தகவல் எட்டியுள்ளது. எப்படியும் அண்ணாமலையை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் தி.மு.க.,வுக்கு இது அதிர்ச்சி தகவல். அதனால், கடைசி கட்டமாக லோக்கல் கட்சியினரை முடுக்கி விட்டு, தி.மு.க., பக்கம் திருப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணிக்காகவே சென்னையில் இருந்து வந்த சபரீசன், கோவை தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து, அதை வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்களாக முகாமிட்டவர், முழுக்க முழுக்க நிர்வாகிகளை முடுக்கும் பணியை மட்டும் மேற்கொண்டுள்ளார். சென்னைக்குச் சென்ற பின்பும், கோவை நிலவரத்தை கவனிப்பேன் என்றும் சொல்லிஉள்ளார். கோவையில் தங்கியிருந்த அவர், ஈரோடு சென்று அங்கும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
கூடவே திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து தேர்தல் வெற்றிக்காக ஆலோசனை வழங்கினார்.
கோவை பொறுப்பு அமைச்சர் ராஜா மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கும் தனித்தனியே ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து