சொந்த இனத்துக்கே துரோகமா : அண்ணாமலையை சுற்றும் புது சர்ச்சை
பா.ஜ., கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனை மையப்படுத்தி கொங்கு மண்டலத்தை சுற்றும் வாட்ஸ்ஆப் தகவல் ஒன்று, பா.ஜ., நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் அங்கம் வகிக்கிறது. இக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், காளிங்கராயர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவரின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு பா.ஜ.,வில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி, கொங்கு மண்டலத்தில் வாட்ஸ்ஆப் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
ஒரு சிறு பிளாஷ்பேக்
கோவையில் 1993ம் ஆண்டு நிதி நிறுவன அதிபர் விவேக் காளிங்கராயர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜான் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான் பாண்டியனும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான வெங்கட்ராமன், கோவை சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் இது தொடர்பாக வாட்ஸ்ஆப் குழுக்களில் செய்தி ஒன்று பரவுகிறது. அதில், 'காளிங்கராயர் வாரிசைக் கொலை வழக்கில் தொடர்புடைய நபருக்கு பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. அவரை வேட்பாளராக்கிய அண்ணாமலை, சொந்த இனத்துக்கு துரோகம் செய்யலாமா?' என்ற ரீதியில் அந்த தகவல் உள்ளது.
ஜான் பாண்டியனை மையப்படுத்தி எழுந்துள்ள சர்ச்சை குறித்து அண்ணாமலை கூறுகையில், "அவரவர் மீதான சட்ட வழக்குகளுக்கு அவரவர் தான் பொறுப்பு" என்றார்.
"கோவை தொகுதியில் அண்ணாமலையை வீழ்த்துவதற்கு தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதில் ஒன்று தான் இது" என கொங்கு மண்டல பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து