கோவையில் காய்ச்சி எடுத்த மோடி
'ரோடு ஷோ' பிரசார நிகழ்ச்சிக்காக கடந்த 18ல் கோவை வந்திருந்த பிரதமர் மோடி, அன்றிரவு சர்க்யூட் ஹவுசில் தங்கினார்.
பா.ம.க.,வுடனான கூட்டணி ஒப்பந்தத்துக்காக பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு 18 இரவில் அனுப்பி வைத்த பிரதமர் மோடி, பின் கோவையில் இருந்த பா.ஜ., முக்கிய நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டவர், ஒரு கட்டத்தில் தமிழக பா.ஜ., கோஷ்டி பூசல்கள் குறித்தும் கேட்டுள்ளார். பின், நிர்வாகிகளை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதாக தகவல் பரவி இருக்கிறது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ.,வில் நிலவும் கோஷ்டி பூசல்கள் மற்றும் தன்னோடு ஒத்துழையாமை செய்யும் தலைவர்கள் குறித்தெல்லாம் பிரதமர் மோடியிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். இதனால், தான் நினைத்தபடி கட்சியை மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு போக முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இன்றி, நிர்வாகிகளை கோவையில் சந்தித்த பிரதமர் மோடி, தமிழகம் விரைவில் பா.ஜ., ஆட்சி நிர்வாகத்தின் கீழ் வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காகத்தான், சுறுசுறுப்பான இளைஞர் அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார். அவருடைய செயல்பாடுகளில் எனக்கு முழு திருப்தி உள்ளது. கடந்த காலங்களில் பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் இருந்த எதிர்ப்பு நிலை மாறி, தற்போது முழு ஆதரவு காணப்படுகிறது.
ஆனாலும், எதிர்பார்க்கும் இலக்கை அடைய வேண்டும் என்றால், அண்ணாமலையில் செயல்பாடுகள் தொய்வின்றி இருக்க வேண்டும். நிர்வாகிகள் அண்ணாமலையின் எண்ணங்களுக்கு ஈடுகொடுத்து செயல்படாததோடு, அவருக்கு எதிராகவும் பலர் செயல்படுவதாக அறிகிறேன்.
இதை பல நிலைகளிலும் உறுதிபடுத்தி இருக்கிறேன். இனிமேலும் இப்படி தொடரக் கூடாது. தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை எச்சரிக்கையாகவே குறிப்பிட விரும்புகிறேன். யாரும் தவறாக எண்ணாமல், கட்சியின் நலனுக்காக இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கொந்தளித்திருக்கிறார்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து