ரகசிய 'அசைன்மென்ட்' கோவையில் களமிறங்கிய போலீஸ்
அண்ணாமலை போட்டியிடுவதால், கோவை தொகுதி அல்லோல கல்லோலப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி பலத்தை மீறி, படையப்பா போல, 'வெற்றிக்கொடி கட்டு...' என்று வருவாரா இல்லை அதிகார பலத்திற்கும், பண பலத்திற்கும் முன்னால் மண்டியிடுவாரா என்று, ஐ.பி.எல்., மேட்ச் போல தமிழகமே உற்று பார்க்கிறது.
அ.தி.மு.க., ஒரு பக்கம், 18 சதவீதம் ஓட்டு உள்ள நாயுடு சமூகத்தவரை வேட்பாளராக போட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஒரு கை பார்த்து வருகிறது. மற்றொரு பக்கம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தி.மு.க., தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும், கொங்கு மண்டலம் தி.மு.க.,வுக்கு கிட்டத்தட்ட அயல்நாடு என்பதால், 'ரிஸ்கான' தொகுதியாகவே கோவையை அந்த கட்சி பார்க்கிறது.
அண்ணாமலையை வீழ்த்த அ.தி.மு.க., முனைப்பாக இருந்தாலும், அதைவிட தி.மு.க., 10 மடங்கு முனைப்பாக இருக்கிறது. காரணம், தங்கள் கணக்கு தப்பிவிடுமோ என்ற அச்சத்தில் கட்சி இருப்பதாக தி.மு.க., உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., வேட்பாளர், கணபதி ராஜ்குமார், அண்ணாமலையின் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமூக ஓட்டுகளை பிரிக்கலாம் என, தி.மு.க., கணக்குப்போட்டு இருந்தது. ஆனால், கணபதி ராஜ்குமார், சொந்த சமூகத்தவரை தேடிச் செல்லும் இடங்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. சரி அதனால் என்ன, நம்மிடம் பண பலம் இருக்கிறது என்று ஒரு மிதப்பில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் வந்த உளவுத்துறை ரிப்போர்டில் அது மட்டுமே போதாது என, எச்சரிக்கப்பட்டு இருந்தது.
உத்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட தி.மு.க., தலைமை, இப்போது, 30 பேர் அடங்கிய உளவுத்துறை குழுவை களமிறக்கி உள்ளது. சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இந்த குழுவின் வேலை என்ன என்பது பற்றி உளவுத்துறை அதிகாரி கூறியதாவது:
எந்த தேர்தல் நடந்தாலும், ஆளும்கட்சிக்காக மக்கள் மனநிலை அறியும் சர்வேயை தமிழகம் முழுதும் எடுத்து அனுப்புவோம். தேர்தலுக்கு முன், பல கட்டங்களாக இது நடத்தப்படும். இதுவரை ஆறு மாதங்களில் நான்கு கட்டங்களாக சர்வே எடுத்து வழங்கி விட்டோம். துவக்கத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலை காணப்பட்டது. அதுகொஞ்சம் கொஞ்சமாக மாறி உள்ளது. இருந்தபோதும், கள நிலவரத்தை அப்படியே அறிக்கையாக தந்து விட்டோம்.
அதன் அடிப்படையில், அரசு மற்றும் ஆளும் கட்சியினர், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் வாயிலாக, மக்கள் குறைகளை தீர்க்க முற்பட்டனர். ஆனால், கோவையில் அண்ணாமலை களம் இறங்கியதும், அந்த தொகுதியில் அதிக கவனம் செலுத்துமாறு, உளவுத்துறைக்கு உத்தரவு வந்தது. கோவையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் மனநிலையை தனித்தனியே பிரித்து அறிக்கை தயார் செய்தோம். அப்போது, முன்பு வராத குறைகளையும் சேர்த்து புதிய பட்டியல் தயார் செய்து அனுப்பினோம்.
இதையடுத்து, சென்னையில் இருந்து 30 பேர் அடங்கிய உளவுத்துறை படை கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கோவையில் முகாமிட்டுள்ள அவர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குறைகள் தீர்க்கப்பட்டனவா என்று உறுதி செய்கின்றனர். செய்யப்படவில்லை எனில், கட்சி சிறப்பாக நியமித்துள்ள குறை தீர்ப்பு குழுவிடம் உடனடியாக தெரிவிக்கின்றனர். புதிதாக ஏதேனும் குறைகள் கவனத்திற்கு வந்தாலும் உடனுக்குடன் தெரிவிக்கின்றனர்.
ரகசியமாக மேற்கொள்ளப்படும் இந்த பணி வாயிலாக, ஆளுங்கட்சி மீது இருக்கும் மக்கள் விரக்தி நீங்கும் என்பதுதான், இந்த முயற்சியின் பின்னணியில் இருக்கும் திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து