அண்ணாமலை வெற்றிக்காக குழு அமைத்து கோவையில் வியூகம்
லோக்சபா தேர்தலில், கோவையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
பிரசாரத்தில் தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் அவரின் வெற்றிக்காக கட்சியின் சார்பில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
இதற்காக கோவையில், பா.ஜ., முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் தான், அண்ணாமலையின் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கொடுக்கும் தொல்லைகளை முறியடிப்பது குறித்தும், அண்ணாமலை பிரசாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்ன செய்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
தொல்லைகளை வரிசைப்படுத்தி, கட்சியின் வழக்கறிஞர் குழுவிடம் கொடுத்து, சட்ட ரீதியில் அதை எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, தமிழக பா.ஜ.,வின் சட்டப்பிரிவு நிர்வாகிகளாக இருக்கும் வழக்கறிஞர்கள் பலரை, கோவைக்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வார்டு வாரியாக
கோவை மேட்டுப்பாளையத்தில் வரும், 10ம் தேதி, பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த கூட்டத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்த, ஒவ்வொரு வார்டு வாரியாக, ஒரு மாநில நிர்வாகியை நியமித்து, பிரசாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சமூக தலைவர்களை சந்தித்து, அவர்களை உடன் அழைத்துச் சென்று, அந்த சமூக மக்களிடம் ஓட்டு கேட்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவையில் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவே, பிரதமரின் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில், அந்த மக்களுக்கு உதவி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், வீடு கட்டி முடிக்க உதவி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் திட்ட பயனாளிகளை தொடர்ந்து சந்தித்து, கூடுதல் உதவி கிடைக்க உதவுவது உள்ளிட்ட பணிகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும்.
மூத்த நிர்வாகிகள் குழு
கோவையில் இருக்கும் பல்வேறு ஜாதி அமைப்புகளையும் சந்தித்து, அவர்களை அண்ணாமலைக்கு ஆதரவாக திருப்ப மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்; அவர்கள், ஜாதி அமைப்பினரை சந்தித்து, ஏன் அண்ணாமலைக்கு ஆதர வளிக்க வேண்டும் என்பது குறித்து விளக்க வேண்டும்.
பின், அண்ணாமலைக்கு ஓட்டளிக்க கேட்க வேண்டும். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஓட்டளிக்க கேட்க வேண்டும்.
ஏற்கனவே சில சமுதாயத்தினரை அக்குழு அல்லாமல் சிலர் சந்தித்து பேசி, பா.ஜ.,வுக்கு ஆதரவாக திருப்பி உள்ளனர். இருந்தபோதும், மீண்டும் அக்குழுவினர் அச்சமுதாயத்தினரை சந்தித்து அண்ணாமலையை ஆதரிக்க அழுத்தம் கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து