அண்ணாமலையை எதிர்க்க நடிகர் சத்யராஜ்?
வரும் லோக்சபா தேர்தலுக்கு எதிர் அணியில் களத்துக்கு வருவோரில், தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என சிலரது பெயரை குறித்து வைத்திருக்கிறது தி.மு.க., அதற்காக, கடந்த சில மாதங்களாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி போல செயல்பட்டு வரும் பா.ஜ.,வினரைத்தான், தங்களின் எதிரிக் கட்சியாக தி.மு.க., நினைக்கிறது. அதற்காக, அக்கட்சி போட்டியிடக்கூடிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்தல் பணியாற்றும்படி, கட்சியினரை தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், தி.மு.க., மற்றும் தமிழக அரசு செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கவில்லை. பெயரளவுக்குத் தான் அவர்கள் விமர்சித்தனர். அதுவும் பெரிதாக மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
ஆனால் பா.ஜ., தரப்பில், தி.மு.க.,வை எதிர்ப்பதையே பிரதானமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை பா.ஜ.,வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பின், நொடிக்கு ஒரு தடவை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்.
எல்லாவற்றையும் ஆதாரங்களோடும் புள்ளி விபரங்களோடும் விமர்சிப்பது, தி.மு.க.,வுக்கும் தலைமைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்றே தி.மு.க., தலைமைக்குப் புரியவில்லை.
எதையாவது விளம்பரப்படுத்தி, அதனால் ஆதாயம் அடையலாம் என தி.மு.க., முயற்சித்தாலும், அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை மக்கள் மத்தியில் போட்டுடைத்து, தி.மு.க.,வை 'பல்பாக்கி' விடுவதில் அண்ணாமலை முனைப்புடன் செயல்படுகிறார்.
இப்படி அவரது அன்றாட செயல்பாடுகளை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கும் நிலையில், அவர் தமிழகம் முழுதும் 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை சென்றார். சென்ற இடமெல்லாம் நேரடியாகவே மக்களை சந்தித்து, ஆட்சி அவலங்களை விவரித்தார்.
இதனால், கட்சிக்கும் அவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், அவர் வரும் லோக்சபா தேர்தலில், கோவை, கரூர், திருப்பூர் அல்லது பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்தி பரவி இருக்கிறது.
இதை கொஞ்ச காலத்துக்கு முன்பே தி.மு.க., தரப்பு மோப்பம் பிடித்து விட்டது. அதனால், கொங்கு பகுதியில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வலுவான வேட்பாளர் ஒருவரை எதிர்த்து போட்டியிட வைத்து, அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
கட்சியில் வலுவான வேட்பாளர்கள் இல்லாததால், கொங்கு பகுதியைச் சேர்ந்த நடிகர் சத்யராஜை களம் இறக்கும் முடிவுக்கு தி.மு.க., வந்திருக்கிறது. ஏற்கனவே தி.மு.க., மீதான பாசத்தில் இருக்கும் சத்யராஜ், இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவிப்பார் என்றும் கட்சியில் நம்புகின்றனர். ஒருவேளை, அவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், அவருக்கு இணையான வேறு ஒருவரை நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தி.மு.க.,வுக்கு எதிராக வேகமாக செயல்பட்டு வேட்பாளராகத் துடிக்கும் பா.ஜ.,வின் எச்.ராஜா, அஸ்வத்தாமன், சீனிவாசன் உள்ளிட்டோரை எப்படியும் களத்தில் வீழ்த்த வேண்டும் என்றும் கட்சி தலைமையில் வலுவான திட்டங்கள் உள்ளன.
அதனால், பா.ஜ., தரப்பில் போட்டியிடக் கூடிய ஒரு சில தொகுதிகளில் தி.மு.க., தரப்பில் தேர்தல் பணிகளில் தீப்பொறி பறக்கும். தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., தரப்பில் மக்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு சலுகைகள் அரங்கேற்றப்படக் கூடும்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து