தம்பி... கொஞ்சம் பொறுமையாக பேசு: அண்ணாமலையை எச்சரித்த பழனிசாமி

"ஒருவர் பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் அந்தக் கட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வை பழித்துப் பேசுகிறார்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.

தே.மு.தி.க., மத்திய சென்னை வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:

மத்திய சென்னையின் சிட்டிங் எம்.பி., ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 75 சதவீதத்தைக் கூட பயன்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சியில் வர்தா புயல் போன்ற ஒன்று வந்திருந்தால் சென்னை காணாமல் போயிருக்கும்.

அந்த ஒருநாள் மழைக்கே முதல்வர் ஸ்டாலின் புலம்பினார். மற்றவர்கள் மீது பழிசுமத்தி தப்பிக்கப் பார்த்தார். தமிழகத்தில் பொம்மை முதல்வர் இருப்பதால் தமிழக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். தி.மு.க.,வின் 3 வருட ஆட்சியில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது, இதைக் கட்டுக்குள் வைக்க ஸ்டாலினுக்கு திறமை இல்லை. எங்கள் ஆட்சியில் விலைவாசி ஏற்றம் வந்தபோது மற்ற மாநிலங்களில் குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினோம்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலையாகும் என்ற சூழலே உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். ஆனால் அந்த நாடு முதலீடு செய்ய விரும்பவில்லை.

ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்றது தொழில் முதலீடுகளை ஈர்க்கவா... இல்லை முதலீடு செய்யவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது. தண்ணீர் பாட்டிலை கூட மதுபானக் கூடத்தில் விற்று பணம் சம்பாதிக்கிறது, தி.மு.க., குடும்பம்.

இங்கு எது கிடைக்கிறதோ இல்லையோ போதைப் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது. இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதுகுறித்து பலமுறை சட்டசபையில் பேசியுள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., ஆட்சி இருக்கிறது. சட்டசபை தேர்தலில் 520 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின், அதில் 10 சதவீத அறிவிப்புகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளார். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையும் ஏமாற்றும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.

ஆட்சிக்கு வரும் போது ஒரு பேச்சு, வந்த பிறகு இன்னொரு பேச்சு என இரட்டை வேடம் போடுகின்றனர். குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் மத்திய அரசு அதிக வரியை விதித்து விற்பனை செய்கிறது. இதை ஸ்டாலின் கூட கேட்கவில்லை,

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் பெட்ரோல்,டீசல் விலையை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வரி என்ற பெயரில் மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியது மத்திய அரசு. 'நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை' என்பது அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. ஆனால், நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.,தான்

ஒருவர் பேசிகொண்டே இருக்கிறார். அவர் கட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. 5 வருடம் நிரம்பாத குழந்தை போல இருப்பவர், அ.தி.மு.க.,வை பற்றிப் பேசுகிறார்.

2024ல் அ.தி.மு.க., காணாமல் போய்விடுமாம். நீ போலீஸ் தானே கண்டுபிடித்துக் கொடு. வரலாறு தெரியாமல் ஏதேதோ பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு... நடப்பது வேறு. அதனால் புலம்பி வருகிறார். பா.ஜ.,வினர் விரக்தியின் எல்லைக்குப் போய்விட்டனர்.

அதனால், தம்பி... கொஞ்சம் பொறுமையாக பேசு. அ.தி.மு.க., ஒரு மாதிரியான கட்சி. இங்கு 2.6 கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர். உங்களை போல விரல்விட்டு என்னும் அளவுக்கு தொண்டர்கள் நிறைந்த கட்சி கிடையாது.

எதை பேச வேண்டுமோ அதைப் பேசுங்கள். உங்கள் கட்சி மோசமாக இருந்தால் எங்கள் கட்சியை ஏன் பழித்துப் பேச வேண்டும். உங்கள் நடவடிக்கையெல்லாம் பார்த்து விட்டுத் தான் வெளியே வந்தோம்.

அ.தி.மு.க.,வை அழிக்க நினைப்பவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். எங்கள் கட்சியில் உழைப்பவர்கள் எந்த நிலைக்கும் வர முடியும். உங்களைப் போல டில்லியில் இருந்து அப்பாயின்மென்ட் போடும் கட்சி கிடையாது. டில்லியில் இருந்து அவரை அப்பாயின்ட்மென்ட் செய்துள்ளனர். ஜூன் 4க்குப் பிறகு அவர் இருப்பாரா... இல்லையா எனப் பார்த்துவிடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


K.Ramakrishnan - chennai, இந்தியா
16-ஏப்-2024 23:23 Report Abuse
K.Ramakrishnan குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் மத்திய அரசு அதிக வரியை விதித்து விற்பனை செய்கிறது. இதை ஸ்டாலின் கூட கேட்கவில்லை என்று பழி போடுகிறீர்கள்.மக்கள் நலனுக்காக நீங்கள் மோடி அரசை கண்டிக்கலாமே? ஏன் செய்யவில்லை... பயம்... ஐ.டி.,இ.டி.,சிபிஐ ரெய்டு பயமா?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்