அனைத்தும் ஏமாற்று வேலை: அண்ணாமலையை சாடிய வேலுமணி

" தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான் போட்டி. ஆனால், தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட மக்கள் தயாராக இல்லை. வாட்ஸாப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் பா.ஜ., பொய் தகவல்களை பரப்புகிறது" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் வேலுமணி கூறியதாவது:

கோவைக்கு மிகப் பெரிய வளர்ச்சியை அ.தி.மு.க., கொடுத்துள்ளது. வேறு எந்தக் கட்சிகளும் இந்தளவு வளர்ச்சிப் பணிகளை செய்யவில்லை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கொடுத்தோம். தி,மு.க., அரசு எதையும் செய்யவில்லை.

அண்ணாமலை தனது தேர்தல் அறிக்கையில், '500 நாள்களில் 100 திட்டங்களை தருவேன்' என்கிறார். இதை விவரம் தெரிந்த மக்கள் ஏற்க மாட்டார்கள். 'சர்வதேச விமான முனையம் அமைப்போம்' என்கிறார். அங்குள்ள நிலங்களை ஜீரோ மதிப்பு என அறிவித்ததால் கையகப்படுத்த முடியவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் நிலத்தை எடுத்தோம். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக அதை முன்னெடுப்பதற்கு தி.மு.க.,வும் எதுவும் செய்யவில்லை. இவர்களின் போட்டியில் விமான நிலையத்தை கைவிட்டு விட்டனர். தி.மு.க., 520 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றியதாக கூறுவதைப் போல தான் அண்ணாமலையின் வாக்குறுதிகளும்.

தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான் போட்டி. ஆனால், தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட மக்கள் தயாராக இல்லை. வாட்ஸாப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் கோவையில் பா.ஜ., வெற்றி பெறுவதைப் போல செய்தி பரப்புகின்றனர்.

பா.ஜ.,வுக்கு 3, 4 சதவீத ஓட்டுகள் தான் உள்ளன. பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டதாக அவர்கள் காட்டிக் கொண்டாலும் மூன்றாவது இடத்தைத் தான் பிடிப்பார்கள். பா.ஜ., செல்வாக்காக இருப்பதாக அவர்களே ஒரு பேப்பரை தயார் செய்துள்ளனர்.

அந்த பேப்பரில், பா.ஜ.,வுக்கு 38.9 சதவீத ஓட்டுகளும் தி.மு.க.,வுக்கு 33.4 சதவீத ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு 18.5 சதவீதமும் நாம் தமிழருக்கு 6.8 சதவீத ஓட்டுகளும் இருப்பதாக போலியாக தயாரித்துள்ளனர். இவ்வாறு செய்து ஒரு மாயையை உண்டு செய்கிறார்கள்.

சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. கோவையில் பா.ஜ.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., இருக்க காரணம், அ.தி.மு.க., தான். கோவையில் ஒவ்வொரு பூத்திலும் பா.ஜ.,வுக்கு ஆள் இருக்கிறதா. களத்தில் அ.தி.மு.க., மட்டும் தான் இருக்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாலங்கள் கட்டப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையை மேம்படுத்தியுள்ளோம். இங்கு 6 புதிய கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.

தொண்டாமுத்துதூர், மதுக்கரை உள்ளிட்ட 6 இடங்களில் தாலுகா அலுவலகங்களைக் கொண்டு வந்தோம். சென்னைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்த மக்களுக்கு இங்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதற்கு காரணம், அ.தி.மு.க., அரசு தான்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 99 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். இந்த திட்டத்துக்காக கேரள முதல்வரை நேரில் சந்தித்து கமிட்டி அமைப்பதற்கு பல கூட்டங்களை நடத்தினோம்.

அதை உத்வேகத்துடன் முதல்வராக இருந்த பழனிசாமி கொண்டு சென்றார். அண்ணாமலையை கேட்டுத் தான் மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். அவர்களிடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாமே. அனைத்தும் ஏமாற்று வேலை.

ஆனைமலை-நல்லாறு திட்டம் என்பது என்பது 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னை. மீண்டும் பழனிசாமி முதல்வராக வந்தால் தான் ஆனைமலை-நல்லாறு திட்டம் உயிர்பெறும்.

அண்ணாமலை அரசியலுக்கு வந்து 2,3 வருடங்கள் தான் ஆகின்றன. ஆனால், 31 ஆண்டுகளாக ஆளும்கட்சியாக அ.தி.மு.க., இருந்தது. ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

நாங்கள் உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளோம். தி.மு.க., செய்யாததை செய்வதற்கு மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். போலியான தகவலை பரப்பாமல் களத்தில் வந்து சந்திக்க சொல்லுங்கள். இங்கு பா.ஜ., போட்டியிலேயே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


K.Ramakrishnan - chennai, இந்தியா
16-ஏப்-2024 23:25 Report Abuse
K.Ramakrishnan அண்ணாமலையின் உளறல்களுக்கு எல்லாம் பதில் சொல்லாதீங்க.. கொங்குச்சீமை அ.தி.மு.க .கோட்டை என்பதை நிரூபியுங்கள்..
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்