பா.ஜ., வேட்பாளர் பட்டியல்: கோவையில் அண்ணாமலை போட்டி
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் அண்ணாமலையும் தென்சென்னையில் தமிழிசையும் களமிறங்க உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் பா.ஜ., முடிவுக்கு கொண்டு வந்தது.
இதில், பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகளும் த.மா.கா.,வுக்கு 3 தொகுதிகளும் அ.ம.மு.க.,வுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., நேரடியாக 20 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நான்கு பேரும் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தென்சென்னையில் டாக்டர் தமிழிசையும் மத்திய சென்னையில் வினோஜ் செல்வமும் வேலூரில் ஏ.சி.சண்முகமும் கிருஷ்ணகிரியில் நரசிம்மனும் நீலகிரியில் எல்.முருகனும் கோவையில் அண்ணாமலையும் பெரம்பலூரில் பாரிவேந்தரும் நெல்லையில் நயினார் நாகேந்திரனும் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிட உள்ளனர்.
முன்னதாக, பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், திருத்தப்பட்ட பட்டியலில் அவர் நெல்லையில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.
வாசகர் கருத்து