'கோவையில் அண்ணாமலை டிபாசிட் வாங்கினால் பெரிய விஷயம்'
''கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டிபாசிட் வாங்கினால் பெரிய விஷயம்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
'தி.மு.க.,வால் தாரை வார்க்கப்பட்ட உரிமைகள், 'தமிழர்கள் உரிமை மீட்போம்; தமிழகம் காப்போம்' என்ற கோஷத்தை முன் வைத்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தி.மு.க., 17 ஆண்டுகள் உத்தரவு போடும் இடத்திலிருந்தும், மாநிலத்தின் உரிமைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் தேர்தல் அறிக்கை, அரைத்த மாவை அரைப்பது போல் உள்ளது.
ஆகாயத்தில் கோட்டை கட்டுவதுபோல், கற்பனை கோட்டையை தேர்தல் அறிக்கையில்கட்டி உள்ளனர்.
எமர்ஜென்சி காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
மத்திய அரசில் இடம் பெற்றிருந்த தி.மு.க., பலன்களை அனுபவித்துக் கொண்டு, இப்போது ஞானோதயம் வந்ததுபோல், மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டு வருவோம் என்பது, தமிழக மக்கள் காதில் பூ சுற்றும் வேலை போல் உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை.
மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். மாநில அரசின் உரிமைகளை, தி.மு.க., மீட்டெடுக்கவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கை மாநில உரிமைகளை மீட்டெடுத்து, தமிழக மக்களை காக்கும் வகையில் அமைந்துஉள்ளது.
பன்னீர்செல்வம் குறித்து ஒற்றை வார்த்தையில் கூறுவதாக இருந்தால், ஒத்தை ஓட்டுக்கு ஒற்றை ஆளு.
பொன்முடியை குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.
இது தற்காலிக தீர்ப்பு. பா.ஜ.,வை எதிர்த்தால் ஜெயில் என்கின்றனர். தேர்தல் அறிவித்த பிறகு, மத்திய அமைப்புகளை அரசியல்வாதிகள் மீது ஏவி விடுவது தவறு. அண்ணாமலை டிபாசிட் வாங்கினால் பெரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து