கோவையில் ராஜாவுக்கு 'செக்' தினகரனுக்கு திடீர் அழைப்பு
கோவையில் வசிக்கும் தேவர் சமூகத்தினர் ஓட்டுகளை பெறும் முயற்சியில், தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலையை ஆதரித்து, அ.ம.மு.க.,வின் தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இடையிலும் கடும் போட்டி நிலவுகிறது.
கோவையில் வசிக்கும் தேவர் சமூக ஓட்டுகளை பெறும் முயற்சியில், தி.மு.க., - பா.ஜ., இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வினர் கூறியதாவது:
கோவையில் சூளூர், இருகூர் மற்றும் கோவை தெற்கில் உள்ள ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில், தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த சமூகத்தில் மட்டும், 75,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள்உள்ளன.
அந்த ஓட்டுகளை பெறும் முயற்சியில், கோவை தொகுதியின் தி.மு.க., பொறுப்பாளரும், தொழில் துறை அமைச்சருமான ராஜா, தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அந்த ஓட்டுகளை அண்ணாமலைக்கு பெற, கோவையில் பிரசாரத்திற்கு வருமாறு, அ.ம.மு.க., பொதுச்செயலரும்,அக்கட்சியின் தேனி தொகுதி வேட்பாளருமான தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவரும் வருவதாகதெரிவித்துள்ளார்.
இருகூர், ராமநாதபுரம் ஆகிய இரு இடங்களில், தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டம், சில தினங்களில் நடத்தப்பட உள்ளது. இதனால் அண்ணாமலைக்கு, கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தையும் அழைத்து, கோவையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து