மகள் நா.த.க., வேட்பாளர் அம்மா தி.மு.க.,வுக்கு பிரசாரம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி நா.த.க., வேட்பாளர், சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. ஆனால், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தர்மபுரியில், தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை மேடைக்கு மேடை கடும் விமர்சனம் செய்து வருகிறார். பா.ஜ.,வில் ஓ.பி.சி.,பிரிவு மாநில துணை தலைவராக இருந்தவர், சந்தன வீரப்பனின் மகள் வித்யாராணி. கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த கட்சி செயல்பாடுகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் திடீரென நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ''என் அப்பா வீரப்பனின் கொள்கையோடு தற்போது ஒத்துப் போவது நாம் தமிழர் கட்சிதான். அதனால் தான் ஓரிரு மாதங்களுக்கு முன் அக்கட்சியில் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். என் அம்மாவும் ஜெயித்துவிட்டு வா என, ஆசி கூறினார்'', என்றார்.
ஆனால், அவரது தாய் முத்துலட்சுமி, தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினராக உள்ளார். அக்கட்சி தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், தர்மபுரியில், தி.மு.க.,வேட்பாளர் மணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கூட்டணியில் இருப்பதால் நான், தி.மு.க., வேட்பாளருக்கு பிரசாரம் செய்கிறேன்,'' என்றார். அதாவது அம்மா தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும், மகள் தி.மு.க.,வினரை திட்டியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து