தயார் நிலையில் சேலம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையம்
ஓமலுார் : சேலம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், அனைத்து ஓட்டு எண்ணும் அறைகளும் தயாராக உள்ளன.
சேலம் லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு கடந்த ஏப்., 19ல் நடந்தது. தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலுார், இடைப்பாடி, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டசபை தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, தொகுதி வாரியாக 'ஸ்டிராங்' ரூமில் வைக்கப்பட்டுள்ளது.ஐந்து அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு, இரவு முழுவதும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூன், 4) ஓட்டு எண்ணிக்கை காலை, 8:00 மணிக்கு துவங்கவுள்ளது.ஓட்டு எண்ணும் மையத்தில் தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, முகவர்களுக்கு தேவையான உணவு வழங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு நாட்களாக, ஓட்டு எண்ணும் அறையில் டேபிள் அமைப்பது, ஒவ்வொரு டேபிளுக்கும் தனியாக கேமரா பொருத்துவது, முகவர்கள் அமரும் இடம் மற்றும் வேட்பாளர்கள் அமரும் இடங்களில் சேர்கள், மைக் அமைப்பது, 14 சுற்றுக்கு தேவையான டேபிள், தபால் ஓட்டுக்களை பிரித்து அடுக்கி வைக்கக்கூடிய டப்பாக்கள் ஆகிய பணிகள் நேற்று முடித்து, ஓட்டு எண்ணும் அறைகள் தயாராக உள்ளது.ஸ்டிராங் ரூமிலிருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரும் வழி தனியாகவும், தேர்தல் அதிகாரிகள் வரும் வழி, முகவர்கள் வரும் வழி என தனித்தனியாக இரும்பு வலை கொண்டு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. விவிபேட் கருவி உள்ள ஆவணங்களை எண்ணுவதற்கு தனியாக, இரும்பு கூண்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியில், 1,500 தேர்தல் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கையின் போது, கல்லுாரிக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை காண கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 'மீடியா' சென்டர் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
வாசகர் கருத்து