தயார் நிலையில் ஓட்டு எண்ணிக்கை மையம் கலெக்டர் பூங்கொடி தகவல்
திண்டுக்கல்: ''திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ,'' கலெக்டர்பூங்கொடி தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளை மறுநாள் (ஜூன் 4) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை நேற்று கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 16,07,051 வாக்காளர்களில் ஆண் 5,58,829 (71.64), பெண் 5,84,311 (70.67), இதரர்கள் 47 (21.56) என 11,43,187 (71.14) வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கையன்று முதலில் காலை 8 :00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி துவங்கப்படும். 30 நிமிடம் இடைவெளியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படும்.
பல்கலை தரைத்தளத்தில் திண்டுக்கல் , பழநி சட்டசபை தொகுதி , முதல் தளத்தில் நத்தம் ,ஆத்துார் தொகுதி , 2ம் தளத்தில் ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை தொகுதிகளுக்கு தனித்தனியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ,எண்ணிக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுக்கள் எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என 84 மேஜை அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு பணியில் 850 போலீசாார் ஈடுபடுகின்றனர். 289 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைக்குள் ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் அலுவலர், தேர்தல் பார்வையாளர், தேர்தல் பணி அலுவலர்கள் , பணியாளர்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரது முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் கைபேசி அனுமதியில்லை. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றார்.
வாசகர் கருத்து