பூதாகரமாக மாறும் மூன்று சென்ட் நில விவகாரம் :கரூரில் தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு
கடந்த, 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரன் அணிக்கு தாவிய செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.
இதையடுத்து, தி.மு.க.,வுக்கு தாவிய செந்தில் பாலாஜி, கடந்த, 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது, போட்டி கடுமையாக இருந்ததால், 25,000 குடும்பங்களுக்கு தலா, 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என, செந்தில் பாலாஜி தொகுதி முழுதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதை வரவேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், பொதுச்செயலர் துரைமுருகனும் (அப்போது பொருளாளர்) பாராட்டி பிரசாரம் செய்தனர். குறிப்பாக, புகளூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில், '3 சென்ட் நிலம் வழங்கும் திட்டத்தை, தமிழகம் முழுதும் விரிவுபடுத்தலாம்' என, ஸ்டாலின் பேசினார்.
அதை தொடர்ந்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், 'செந்தில் பாலாஜி சொந்த செலவில், 3 சென்ட் நிலம் வழங்குவார்' என, பேசி சூட்டை கிளப்பினார். அந்த தேர்தலில் செந்தில் பாலாஜி அமோக வெற்றி பெற்றார். ஆனால், வாக்குறுதி படி, 3 சென்ட் நிலம் வழங்கவில்லை.
இந்நிலையில், இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர், 'அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தேர்தல் வாக்குறுதிப்படி, 3 சென்ட் நிலம் வழங்காமல், செந்தில் பாலாஜி ஏமாற்றி விட்டு, புழல் சிறைக்கு சென்று விட்டார்.
'நீங்கள் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், காங்., வேட்பாளருக்கா உங்கள் ஓட்டை போடுவீர்கள்' என, கேள்வி கேட்டு அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி முழுதும், வீதிவீதியாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவில், 3 சென்ட் நிலம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
வாசகர் கருத்து