நாலா பக்கமும் நெருக்கடி ஈரோட்டில் முத்துசாமிக்கு சிகிச்சை
நாலா பக்கமும் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் தி.மு.க.,வினர் கூறியதாவது:
ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் உதயநிதி ஆதரவாளர் என்பதால், இளைஞரணி நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாவட்ட பொறுப்பு அமைச்சரான முத்துசாமி ஆதரவாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில் அ.தி.மு.க., முந்துகிறது என, உளவுத் துறை தகவல் தெரிவித்ததால், சிறப்பு கவனம் செலுத்தும்படியும், அவரைத் தான் நம்பி இருப்பதாகவும், முத்துசாமியிடம் முதல்வர் கூறியிருந்தார்.
ஈரோடு தி.மு.க., வேட்பாளர் பிரகாஷை, யாரோடும் கலந்து ஆலோசிக்காமல், உதயநிதி தன்னிச்சையாக அறிவித்தார். எனவே, அவர் முத்துசாமியை மதிப்பதில்லை; கட்சி நிர்வாகிகளையும் கண்டு கொள்வதில்லை.
மூன்று முறை தேர்தல் பிரசாரத்திற்கு வருவதாக தேதி கொடுத்த நிலையில், நேற்று தான் ஈரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். தொடர்ந்து அமைச்சர் முத்துசாமியையும் சந்தித்து பேசினார்.
இந்த நெருக்கடி ஒரு பக்கம் இருக்க, அடுத்த நெருக்கடியாக, ஈரோட்டில் நடந்த தி.மு.க., பிரசார கூட்டத்தில், ஸ்டாலின் பேசிய பேச்சு சரச்சையை எழுப்பியுள்ளது.
அதாவது, கீழ்பவானி ஆயக்கட்டில் நேரடி பாசனம், வாய்க்கால் சீரமைப்பு, காளிங்கராயன் கால்வாயில் கான்கிரீட் அமைத்தல் போன்ற பணிகளை, ஸ்டாலின் பட்டியலிட்டு பேசியதில், எந்த உண்மையும் இல்லை என, விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஒட்டுமொத்தமாக காளிங்கராயன் பகுதி விவசாயிகள் 3 லட்சம் பேர் உள்ளதால், அவர்களின் ஓட்டுகள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை தொகுதியில் வரும் 12ல் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. அதில் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக, அமைச்சர் முத்துசாமியை சந்திக்க, கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கடியால், அவர்களை முத்துசாமி சந்திக்கவில்லை.
இப்படி நாலா பக்கம் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முத்துசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
'அமைச்சருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு உடல்நலம் சரியில்லை. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவரது மகன் வீட்டு தோட்டத்தில் தங்கியுள்ளார்' என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து