விரிவான விமான சேவை தேவை
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், நம் நாட்டுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. குறிப்பாக, சீனாவை மட்டுமே நம்பி இருக்காமல், மற்றொரு இடத்திலும் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. இது, பொருளாதார வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னிலையில் உள்ள தமிழகத்திற்கு வரப்பிரசாதம்.
தமிழக தொழிலதிபர்களும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, தங்கள் தொழில்களை விரிவுபடுத்தவும், புதிய தொழில்களில் முதலீடு செய்யவும் ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களது முதலீடு வாயிலாக லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், மற்ற மாநிலங்களும், அவற்றில் உள்ள தொழிலதிபர்களும் இதே ஆர்வத்தில் இருக்கின்றனர். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருக்க வேண்டுமானால், தொழில் அதிபர்களின் முதலீடுகளை சாத்தியப்படுத்த வசதிகளும் தேவை.
அதில், மிக முக்கியமானது விரிவான விமான சேவை. ஏனெனில், அனைத்து நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கும் வெளிநாட்டு தொடர்புகள் ஏதோ ஒரு விதத்தில் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை தருவிப்பவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், முதலீட்டாளர்கள் என, தொழில் சார்ந்தோர் வந்து போக வேண்டும்.
நிறைய வாய்ப்பு
நம் நாட்டு தொழில் சார்ந்தோரும், பொருள் தருவிப்பவர்களை சந்திக்க, இயந்திரங்கள் வாங்க, கண்காட்சிகளில் பங்கேற்க இதே போல் போய் வர வேண்டும். வெளிநாடுகள் என்ன, இந்திய சந்தையே விரிவடைந்து வருகிறது. நாட்டின் பிற பகுதிகளிலுமே வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
இப்படி பல்வேறு தொலைதுார இடங்களுக்கு அடிக்கடி சென்றுவர விமான பயணம் தான் உகந்தது.
தமிழகத்தில் இன்று ஏழு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில், ஓசூர் செயல்படவில்லை. மீதமுள்ளவற்றில், சேலத்தில் இருந்து நான்கு ஊர்களுக்கும் துாத்துக்குடியில் இருந்து இரண்டு ஊர்களுக்கும் என, குறைந்த அளவே விமான சேவை இருக்கிறது.
திருச்சி, கோவை மற்றும் மதுரையை பொறுத்தவரை; திருச்சியில் இருந்து மொத்தம் 14 ஊர்களுக்கு சேவை உள்ளது, அதில் 10 வெளிநாடு, நான்கு உள்நாடு; கோவையில் இருந்து மொத்தம் 10 ஊர்களுக்கு சேவை உள்ளது, அதில் மூன்று வெளிநாடு, ஏழு உள்நாடு; மதுரையில் இருந்து மொத்தம் 8 ஊர்களுக்கு சேவை உள்ளது, அதில் மூன்று வெளிநாடு, ஐந்து உள்நாடு.
அளவுகோல் என்ன?
சென்னையில் இருந்து மட்டும் தான் 65 விமான சேவைகள் உள்ளன. அதாவது, தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் விமான சேவை மிக மிக மோசமாக உள்ளது. மோசமாக உள்ளது என்பதற்கு அளவுகோல் என்ன?
கோவையை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட 45 லட்சம் பேர் வசிக்கக் கூடும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காததால், நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.
கோவைக்கு இணையாக மக்கள் தொகை உள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து, 189 ஊர்களுக்கு விமான சேவை உள்ளது, சீனாவின் தாலியான் நகரத்தில் இருந்து 91 ஊர்களுக்கு விமான சேவை உள்ளது. ஏன் இந்தியாவிலேயே மஹாராஷ்டிரத்தின் புனே நகரத்தில் இருந்து 35 ஊர்களுக்கு விமான சேவை உள்ளது. இவை எல்லாம் கோவையை போல் மக்கள் தொகை உள்ள நகரங்கள் தான். கோவையை போல் தலைநகர் இல்லை.
மேலிருக்கும் உதாரணங்களில் இருந்தே விமான சேவைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒற்றுமை இருக்கிறது என்று தெரியவரும்.
சுற்றுலா வளம்பெறும்
சென்னை தவிர்த்து, தமிழகத்தில் விரிவான விமான சேவை இல்லாததற்கு காரணம், நம் அரசியல்வாதிகளின் முயற்சியின்மை தான். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கேரளா. கேரளாவில் நான்கு விமான நிலையங்கள் தான் உள்ளன. அவை, கொச்சி, திருவனந்தபுரம், கண்ணுார் மற்றும் கோழிக்கோடு. இவற்றில் குறைந்த எண்ணிக்கையில் சேவைகள் உள்ளது கண்ணுார். ஆனால், அங்கிருந்தே 16 ஊர்களுக்கு சேவைகள் உள்ளன. அதிகபட்சமாக கொச்சியில் இருந்து 32 ஊர்களுக்கு சேவைகள் இருக்கின்றன.
இதற்கு காரணம், அங்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இணைந்து, தங்கள் மாநிலத்தின் தேவைக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பது. அவர்கள் வெறும் 20 எம்.பி.,க்களை தான் லோக்சபாவிற்கு அனுப்புகின்றனர். நம்மை போல் 39 எம்.பி.,க்கள் கிடைத்தால் வேறு என்னவெல்லாம் சாதித்து இருப்பர்?
தமிழகத்தில் விமான சேவை பரவலா கவும் விரிவாகவும் கிடைத்தால்; தொழில்களும், சுற்றுலாவும் வளம்பெறும், சென்னை விமான நிலையத்தில் உள்ள நெரிசல் குறையும், மற்ற மாவட்டத்தினர் சென்னையை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏன், சென்னை அருகே பரந்துாரில் வளமான விளை நிலங்களை எடுத்து ஆயிரக்கணக்கான கோடி செலவில் இரண்டாவது விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியமே வராது.
தமிழக எம்.பி.,க்கள் நமக்காக சாதித்து தரக்கூடியது எவ்வளவோ இருக்கிறது. அவற்றில், விமான போக்குவரத்துக்கு அடுத்து வரும் எம்.பி.,க்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தற்போது, தமிழகத்தில், சென்னை தவிர பிற நகரங்களில் இருந்து, மேற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல மட்டும் தான் வசதி இருக்கிறது. ஐரோப்பிய கண்டம், ஆப்ரிக்க கண்டம், வட மற்றும் தென் அமெரிக்க கண்டங் களில் உள்ள நாடுகளுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
அதற்கு தேவையான விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதில் இருந்து, மத்திய அரசோடு பேச்சு நடத்துவது வரை அனைத்திலும் மத்திய- - மாநில அரசுகளுக்கு பாலமாக எம்.பி.,க்கள் செயல்பட வேண்டும்.
-குமார் துரைசாமி,இணை செயலர் ,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
வாசகர் கருத்து